Published : 08 Nov 2020 03:13 AM
Last Updated : 08 Nov 2020 03:13 AM

தீபாவளிக்கு லஞ்ச பணம் வசூலித்தபோது வேலூர் மாவட்ட ஊராட்சிகளின்உதவி இயக்குநரிடம் ரூ.92 ஆயிரம் பறிமுதல் வீடுகளில் நடத்திய சோதனையில் சொத்து ஆவணங்கள் சிக்கின

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி கிராமத்தில் உள்ள செந்தில்வேலன் வீடு.

வேலூர்

வேலூர் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.91,700 பணத்தை லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக வீட்டில் நடத்திய சோதனையில் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வேலூர் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநராக இருப்பவர் செந்தில்வேலன் (40). இவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒப்பந்ததாரர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் இருந்து லஞ்சப் பணம் பெற்றுவருவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், டிஎஸ்பி ஹேம சித்ரா தலைமையிலான குழுவினர் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தை நேற்று முன்தினம் மாலை கண்காணித்தனர். மாலை 6 மணியளவில் அலுவலக வளாகத்தில் இருந்தபடி ஒப்பந்ததாரர் ஒருவரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் தொகையை பெற்றபோது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் பிடித்தனர்.

பின்னர், அவரது கார் மற்றும் அறை என சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் செந்தில்வேலன் மற்றும் அவரது கார் ஓட்டுநர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட நபர்களிடம் இருந்து கணக்கில் வராத பணம் 91 ஆயிரத்து 700 ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செந்தில்வேலன் மீது வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். செந்தில்வேலன் வேலூரில் வசித்துவரும் வீட்டில் நேற்று சோதனை நடத்தினர்.

அதேபோல், இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி கிராமம். அங்குள்ள வீட்டில் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் நேற்று நண்பகல் 12 மணியளவில் தொடங்கிய சோதனை இரவு 8 மணியை கடந்தும் தொடர்ந்து நடந்து வருகிறது. அப்போது, பல்வேறு இடங்களில் அவர் வாங்கிய சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x