Published : 07 Nov 2020 03:15 AM
Last Updated : 07 Nov 2020 03:15 AM
தூத்துக்குடியில் நவ.11-ம் தேதி முதல்வர் கலந்து கொள்ளும் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விருப்பப்பட்டால் இதில் கலந்து கொள்ளலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
கழுகுமலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் தூத்துக்குடி வர பயப்படுகிறார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் ஏன் பயப்பட வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை வழங்கியதே அதிமுக ஆட்சி தான். கரோனா ஊரடங்கு காலத்தில் சுமார் 20 மாவட்டங்கள் வரை ஆய்வு பணிக்கு தமிழக முதல்வர் சென்றுள்ளார்.
ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் கண்ணாடி அறைக்குள் இருந்து கொண்டு காணொலி மூலம் கட்சிக்காரர்களை சந்திக்கிறார். முதல்வர் பற்றி குறை கூற அவருக்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை. அவர் துணை முதல்வராக இருந்தபோது, அவரது சகோதரர் அழகிரிக்கு பயந்து மதுரை பக்கமே வராமல் இருந்தார். அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பாதுகாப்பு அளித்த பின்னர் தான் மதுரைக்கு வந்தார்.
தமிழக முதல்வர் நவ.11-ம் தேதி தூத்துக்குடி வர உள்ளார். ஏராளமான திட்டங்களையும் அறிவிக்க உள்ளார். ஸ்டாலின் விருப்பப்பட்டால் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். அதிமுகவில் யாரும் பயப்பட மாட்டோம்.
கமல்ஹாசன் அரசியலில் 3-வது அணி அல்ல 4-வது அணி கூட அமைக்கலாம். 2016-ல் அதிமுக மக்களுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. திமுக வலுவான கூட்டணி அமைத்திருந்தது. 3-வது அணியும் களத்தில் இருந்தது. எத்தனை அணிகள் இருந்தாலும் தன்னந்தனியாக நின்று தேர்தல் களத்தில் வென்ற இயக்கம் அதிமுக தான். எனவே, இந்த முறையும் எத்தனை அணி அமைந்தாலும் கவலையில்லை. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி தான் அமையும் என்றார்.
கந்த சஷ்டி
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர், எஸ்பி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, திருச்செந்தூர் கோயில்இணை ஆணையர் கல்யாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கழுகுமலை பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் நடந்தது. அமைச்சர் தலைமை வகித்து பேசும்போது, ‘‘தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்மூலம் வல்லாறைவென்றான் கண்மாய் பகுதியில் கிணறு அமைக்கும் பணிகளையும், குழாய் அமைக்கும் பணிகளையும் விரைவு படுத்தி கழுகுமலை பேரூராட்சி பகுதிகளுக்கு விரைவில் குடிநீர் வழங்க ஆவனசெய்ய வேண்டும். வார்டு எண் 15, 6 ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளைவிரைந்து முடிக்க வேண்டும்’’ என்றார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.19.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சீரடுக்கு காற்று சுத்திகரிப்பு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அரங்கத்தை அமைச்சர் திறந்து வைத்து, ரூ.33.36 லட்சம் மதிப்பிலான நுண்துளை மூட்டுஅறுவை சிகிச்சை கருவிகளின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். வைகுண்டம் எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்ரேவதி பாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாவலன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, குழந்தைகள் நல பேராசிரியர் அருணாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT