Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM
``தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் வரத் தயங்குவது ஏன்?” என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
திமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டத்துக்கான தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. காணொலி காட்சிமூலம் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தூத்துக்குடியில் மாவட்டஆட்சியர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், அரசு மருத்துவமனை, மீன்வளக் கல்லூரி, கடல்சார் பயிற்சி மையம், மாநகராட்சி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் வந்தது திமுக ஆட்சிக் காலத்தில்தான். ஆனால், அதிமுக ஆட்சியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகபோராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேர் கொலை, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் கொலை, சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த செல்வன் என்ற இளைஞர் கொலை ஆகியவைதான் நடந்துள்ளன.
துப்பாக்கி சூடு சம்பவம் குறித்துவிசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. 36 மாதங்கள் ஆகியும் ஆணையத்தின் அறிக்கை இதுவரை வெளிவரவில்லை. உண்மையான குற்றவாளி யார் எனவெளியே தெரிந்துவிடும் என்பதற்காக ஆணையத்தை முடக்கிவிட்டார்கள்.
தூத்துக்குடி நிகழ்ச்சியை முதல்வர் தள்ளிப்போட என்ன காரணம்?, மக்களைப் பார்த்து பயமா?
விவசாயிகள், நெசவாளர்கள், வியாபாரிகள், மீனவர்கள் என எல்லோருக்கும் முதல்வர் துரோகம் செய்து வருகிறார். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போர்தான் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல். தமிழகத்தை மீட்க வேண்டும். கருணாநிதியின் கனவை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுக்கூட்டத்துக்கு முன்னிலை வகித்து கனிமொழி எம்பி பேசும்போது, ‘‘தமிழகத்தின் உரிமைகளுக்காக அதிமுக அரசுகுரல் எழுப்பவில்லை. மாநிலஉரிமைகளை, மொழி உரிமைகளை, அடையாளங்களை மத்திய அரசிடம் அடகு வைக்கிறது. இந்த கூட்டணியை உடைத்தெறிந்து தமிழகத்தை மீட்டெடுப்போம்’’ என்றார். எம்எல்ஏக்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சண்முகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வடக்கு மாவட்ட திமுகசார்பில் 350 பேர், தெற்கு மாவட்டதிமுக சார்பில் 621 பேர் கவுரவிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT