Published : 16 Dec 2021 03:08 AM
Last Updated : 16 Dec 2021 03:08 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் உள்ள மிகப்பெரிய குளம் கடம்பாகுளம். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடம்பாகுளம் நிரம்பி அதிகமான உபரிநீர் வெளியேற்றப்பட்டது. கால்வாயில் பல்வேறு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக உபரிநீர் சீராக செல்வதில் தடை ஏற்பட்டது.
இதையடுத்து, கடம்பாகுளம் உபரிநீர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்ய பொதுப்பணித்துறை மற்றும் நில அளவைத் துறையினர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். இப்பணிகளை புறையூர் பகுதியில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் கூறும்போது, “பொதுப்பணித்துறை மற்றும் நிலஅளவைத்துறை மூலம் கடம்பாகுளம் உபரிநீர் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அளவீடு செய்வதற்கு 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் 17 கிமீ நீளமுள்ள நீர்வழிப் பாதையில் முழுமையாக ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணிகளை 2 வாரங்களில் முடிப்பார்கள். பின்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்” என்றார்.
மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உடனிருந்தனர்.
விபத்தில் சிக்கியவர்களுக்கு அமைச்சர் உதவி
புறையூர் பகுதியில் ஆய்வை முடித்துக் கொண்டு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் காரில் தூத்துக்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் பழையகாயல் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்து கிடந்தனர். அதில் இருந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதனை கண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது காரை நிறுத்தி அவர்களுக்கு உதவி செய்தார். காயமடைந்த அந்த பெண்ணை மீட்டு தன்னுடன் வந்த மற்றொரு காரில் ஏற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், மருத்துவமனை முதல்வரை செல்போனில் தொடர்பு கொண்டு அந்த பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்க கேட்டுக் கொண்டார். மோட்டார் சைக்கிளில் வந்த ஆணும், பெண்ணும் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர்கள். திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் போது விபத்தில் சிக்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT