Published : 15 Dec 2021 03:09 AM
Last Updated : 15 Dec 2021 03:09 AM
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம், என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டதாரிகளுக்கும் வழங்கப்படுகிறது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. தகுதியுடைய நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வரவேண்டும்.
மேலும், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தில் 7-ம் பக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலரிடம் கையொப்பம் பெற்று வரவேண்டும்.
சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித் தொகை மூன்று ஆண்டுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து பத்தாண்டுகளுக்கும் வழங்கப்படும்.
இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காத நபர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT