Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அடைக்கப்பட்ட கால்வாயைத் திறக்க வலியுறுத்தி, கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் இரு கிராம மக்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
காளையார்கோவில் அருகே மாரந்தை, தளிர்தலை கிராமங்களின் கண்மாய்களில் நாட்டாறுகால் ஆற்று கால்வாய் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது. 2013-ம் ஆண்டு பொதுப்பணித்துறை சார்பில் இக் கால்வாய் தூர்வாரப்பட்டது. அப்போது இரு கண்மாய்கள் பிரியும் இடத்தில் மாரந்தை கண்மாய்க்கு செல்லும் கால்வாய் மட்டும் அடைக்கப்பட்டது.
அதன்பிறகு, அந்த கால்வாயை திறக்க தளிர்தலை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாரந்தை கிராமமக்கள் தொடர்ந்த வழக்கில் மாரந்தை கண்மாய்க்கு கால்வாயை திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து 2019-ம் ஆண்டு கால்வாயைத் திறக்க அதிகாரிகள் சென்றபோது தளிர்தலை கிராம மக்கள் பிரச்சினை செய்தனர். இதையடுத்து கால்வாய் திறப்பதை அதிகாரிகள் நிறுத்தினர். அதன்பிறகு கால்வாயை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் இந்தாண்டு அப்பகுதியில் பெய்த மழையால் மாரந்தை கண்மாய் நிரம்பியது. கண்மாய் உபரி நீர் செல்லும் கலுங்கை கிராம மக்கள் அடைத்தனர். இதனால் தளிர்தலை விவசாய நிலங்களுக்குள் கண்மாய் நீர் சென்றது. இதையடுத்து கலுங்கு பகுதியை திறக்க தளிர்தலை கிராம மக்கள் அதிகாரிகளிடம் வற்புறுத்தி வருகின்றனர்.
அதேபோல் உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி, அடைக்கப்பட்ட கால்வாயை திறந்துவிடக் கோரி மாரந்தை கிராம மக்கள் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் கால்வாயை திறந்துவிடாமல், கலுங்கு பகுதியை அதிகாரிகள் திறக்கக் கூடாது என வலியுறுத்தினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
பொதுப்பணித்துறையின் தவறான நடவடிக்கையால் இரு கிராமங்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT