Published : 13 Dec 2021 03:07 AM
Last Updated : 13 Dec 2021 03:07 AM
திருப்பூர் மாவட்டத்தில் பெருமளவிலான விவசாயிகள் மிளகாயை பயிரிட்டுள்ள நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழையால் பழ அழுகல் மற்றும் நுனி கருகல் நோய் பரவி வருகிறது.
இதை தடுக்கும் வகையில்,மிளகாயில் நோய் மேலாண்மைதொடர்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் க.வி.ராஜ லிங்கம் கூறியதாவது:
நோய் தாக்கிய மிளகாய் செடியின் நுனிகள் கருகிவிடும். நாற்று நடவுசெய்த ஒரு மாதத்துக்கு பின்பு, நுனிக்கருகல் அறிகுறிகள் தோன்றும். நோயுற்ற செடியில் கிளை நுனி, தளிர் இலைகள் கருகி காய்ந்து காணப்படும். நோய் தீவிரமாகும்போது, நுனியில் இருந்து நோய் கீழ் நோக்கி பரவும். பூக்கள் அதிகளவில் உதிர்ந்துவிடும்.
நோயால் பாதிக்கப்பட்ட பகுதி அல்லது கிளைகளில் கருப்புப்புள்ளிகள் தோன்றும். இந்நோய் தாக்கிய பழங்களில் முதலில் சிறியபழுப்பு நிறப் பகுதிகள் தென்படும்.
நாளடைவில் நோய் முதிர்ச்சியடையும்போது, பாதிக்கப்பட்ட மிளகாய் பழங்களில் சிறு, சிறு கருப்பு நிறப் புள்ளிகளைக் காணலாம். மகசூலில் குறைவு ஏற்படுவதோடு, வற்றலும் தரம் குறைந்துவிடும்.
இந்நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் மேன்கோசெப் அல்லது 2.5 கிராம் காப்பர் ஆக்சிகுளோரைடு மருந்தை 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தை 04255- 296644, 04255- 296155 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT