Published : 13 Dec 2021 03:09 AM
Last Updated : 13 Dec 2021 03:09 AM

ஆண்டறிக்கை புத்தகத்தில் எம்.பி, எம்எல்ஏ படங்கள் இடம்பெறாததால் - கூட்டுறவு வங்கியின் பேரவைக் கூட்டத்தை நிறுத்தி வாக்குவாதம் செய்த திமுகவினர் :

தஞ்சாவூர்

கூட்டுறவு வங்கியின் ஆண்டறிக்கை புத்தகத்தில் எம்.பி, எம்எல்ஏவின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி, வங்கியின் பேரவைக் கூட்டத்தை நிறுத்தி, திமுகவினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கியின் 116-வது பேரவைக் கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கூட்டத்துக்கு, வங்கி தலைவர் எஸ்.சரவணன்(அதிமுக) தலைமை வகித்தார். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எம்.சுவாமிநாதன், எஸ்.விருத்தாசலம், மேலாண்மை இயக்குநர் எம்.ஆர்.அன்புச்செல்வி, பொதுமேலாளர் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தலைவர் சரவணன் பேசுவதற்காக எழுந்தபோது, மாநகர திமுக துணைச் செயலாளர் நீலகண்டன் தலைமையில் அக்கட்சியினர் 8 பேர் அரங்கத்துக்குள் நுழைந்து, வங்கி தலைவரை பேச விடாமல் தடுத்தனர்.

பின்னர் அவர்கள், “இதற்கு முன்பு வெளியிடப்பட்ட ஆண்டறிக்கை புத்தகத்தில் எம்பி.யாக இருந்த வைத்திலிங்கம், அமைச்சராக இருந்த துரைக்கண்ணு ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், தற்போது திமுக ஆட்சி நடைபெறும் நிலையில், இந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கை புத்தகத்தில் தஞ்சாவூர் எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோரின் புகைப்படங்கள் ஏன் அச்சிடப்படவில்லை’’ என கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த சரவணன், “தமிழகஅரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்றி புகைப்படங்களை அச்சடிக்கும்படி கூறிவிட்டோம். எந்தப் படங்கள் இடம்பெற வேண்டும் என நிர்வாகக் குழு தரப்பில் இருந்து எதுவும் சொல்லவில்லை” என்றார். ஆனால், ‘‘நாங்கள் நிர்வாகக் குழு விளக்கத்தை கேட்கவில்லை. அதிகாரிகளிடம்தான் கேள்வி கேட்கிறோம்’’ என்றுகூறி, கூட்டத்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, மேலாண்மை இயக்குநர் அன்புச்செல்வி எழுந்து, “தற்போது நிகழ்ந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி தமிழக அரசின் கொறடா, எம்.பி, எம்எல்ஏ புகைப்படங்களையும் அச்சிடுவோம்” என்றார்.

ஆனாலும், கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு, புகைப்படங்களுடன் ஆண்டறிக்கை புத்தகத்தை அச்சிட்டபிறகு, மற்றொரு தேதியில் கூட்டத்தை நடத்த வேண்டும் என திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழுவினரான அதிமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து, தலைவர் சரவணன் பேசும்போது, “ஆண்டறிக்கை புத்தகம் மாற்றி அச்சிடப்பட்டு, மீண்டும் வெளியிடப்படும். ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ன. எம்.பி, எம்எல்ஏ புகைப்படங்கள் இடம்பெறாதது எதிர்பாராமல் நடந்தது. இதை பெரிதுபடுத்த வேண்டாம்” என்றார்.

இதை ஏற்றுக் கொள்ளாத திமுகவினர், “பொது மேலாளர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றனர். இதைத் தொடர்ந்து, பொதுமேலாளர் ரவிச்சந்திரன் பேசியபோது, “நிகழ்ந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி தவறு நடக்காது” என்றார். இதையடுத்து, திமுகவினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x