Published : 13 Dec 2021 03:09 AM
Last Updated : 13 Dec 2021 03:09 AM
ஊழல் முறைகேடுகளைத் தவிர்க்க, 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் வேளாண் அதிகாரிகளை உடனடியாக மாநில அளவில் பணி மாறுதல் செய்ய வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வேளாண் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.24 லட்சம் ரொக்கத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றிய தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
விவசாயிகளுக்கு ஒதுக்கப்படும் மானிய விலையிலான உளுந்து, பயறுவகைகள் மற்றும் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்காமல், தனியார் கடைகளில் மொத்தமாக விற்பனை செய்து ஊழல் முறைகேடு செய்வது தொடர்கிறது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் விவசாயிகள் ஆலோசனைக் குழுக்களில், ஆளுங்கட்சி பிரமுகர்களையும், தனக்கு வேண்டப்பட்ட நபர்களையும் நிர்வாகிகள், உறுப்பினர்களாக தேர்வு செய்து, இந்த திட்ட நிதியில் ஊழல், முறைகேடுகளை வேளாண் துறை அதிகாரிகள் துணிவுடன் செய்து வருகின்றனர்.
எனவே, ஆத்மா திட்டத்துக்கு கடந்த பல ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து தமிழக அரசு உயர்நிலை விசாரணைக்குழு அமைத்து விசாரித்து, முறைகேடு செய்தவர்களை தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.
காவிரி டெல்டாவில் அரசியல் பிரமுகர்களின் துணையுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் வேளாண் அதிகாரிகள்தான், இதுபோன்ற ஊழலுக்கு துணை போகின்றனர்.
எனவே, 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் வேளாண் அதிகாரிகளை உடனடியாக மாநில அளவில் பணி மாறுதல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT