Published : 12 Dec 2021 03:09 AM
Last Updated : 12 Dec 2021 03:09 AM

சென்னை லலிதாம்பிகை மருத்துவமனையில் - பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை :

எஸ்.வி.செந்தில்நாதன்

சென்னை

சென்னை மதுரவாயலில் உள்ள லலிதாம்பிகை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குடலிறக்கப் பிரச்சினை சரிசெய்யப்பட்டது.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

உடலில் உள்ள பலவீனமான துளைகள் வழியாக உடல் உறுப்புகள், குறிப்பாக குடல் வருவதையே குடலிறக்கம் அல்லது ‘இரணியா’ (HERNIA) என்கிறோம். இது ஆண், பெண் மட்டுமின்றி, குழந்தைகளுக்கும் ஏற்படலாம், ஒரு குழந்தையின் முதல் 12 மாதங்கள் மிக முக்கியமானது. குழந்தையின் எடை 3 மடங்காக அதிகரிக்கும் காலம் இது. அப்போது ஏற்படும் குறைபாடுகளை அலட்சியம் செய்யாமல் தாமதமின்றி குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு குடலிறக்கம், தொப்புள் துளை வழியாகவோ, அல்லது விதை, வயிற்றுப் பகுதியில் இருந்து விதைப்பை வந்தடையும் துளை மூடப்படாமல் இருந்தாலோ குடல் வெளியேற வாய்ப்பு உள்ளது.

இது குழந்தைகளுக்கு இரு பக்கங்களிலும் ஏற்படும் அபாயம் உள்ளது. தவிர, வெளியேறிய குடல் பகுதி போதிய ரத்த ஓட்டமின்றி அழுகும் அபாயம் உள்ளது. எனவே, உரிய தருணத்தில் மருத்துவரை அணுகி, ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து அறுவை சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

பிறந்து 30 நாட்களே ஆன பச்சிளம் பெண்குழந்தைக்கு குடலிறக்கம் உள்ளதை அறிந்த பெற்றோர், சென்னை லலிதாம்பிகை மருத்துவமனையை அணுகினர். உடனடியாக அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை (INGUINAL HERNIOTOMY - Bilateral) செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன.

பச்சிளம் குழந்தைகளுக்கான மயக்கவியல் நிபுணர் டாக்டர் மைதிலி மேற்பார்வையில் டாக்டர் ஹரிஷ் உதவியுடன், குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.சரவணபவன் தலைமையில் டாக்டர் ஜெனோலின் உதவியுடன் கடந்த 7-ம் தேதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தாயும், சேயும் நலமாக உள்ளனர் என்று மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.வி.செந்தில்நாதன் கூறினார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x