Published : 10 Dec 2021 03:07 AM
Last Updated : 10 Dec 2021 03:07 AM
எண்ணூர் கழிமுகத்தில் டான்ஜெட்கோ வெளியேற்றும் சாம்பல் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்த ஷீலா நாயர் தலைமையில் கூட்டு நிபுணர் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வட சென்னையில் 40 கிமீ சுற்றளவில் எண்ணூர் உப்பங்கழி அமைந்துள்ளது. மொத்த பரப்பில் 43 சதவீதம் பக்கிங்ஹாம் கால்வாயையும், 19 சதவீதம் கொசஸ்தலை ஆற்றையும், 19 சதவீதம் அரசு நிலத்தையும் உள்ளடக்கியுள்ளது.
இந்த கழிமுகம் வடசென்னை, வல்லூர், எண்ணூர் அனல்மின் நிலையங்களால் கடுமையாக மாசடைந்து. அப்பகுதியில் மீன்வளம் முற்றிலுமாக அழிந்துள்ளதாக மீனவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எண்ணூர் தாழங்குப்பத்தைச் சேர்ந்த வி.ரவிமாறன், மீனவர் நல சங்கத்தைச் சேர்ந்த எம்.ஆர்.தியாகராஜன் ஆகியோர் எண்ணூர் கழிமுகத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் சாம்பல் கொட்டப்படுவதை தடுக்கக் கோரி கடந்த 2016-ம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் ஏற்கெனவே சாம்பல் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஆய்வு செய்ய பேராசிரியர்கள் சுல்தான் இஸ்மாயில், நரசிம்மன், பாலாஜி நரசிம்மன் ஆகிய 3 நிபுணர்களை கடந்த 2017-ம் ஆண்டு பசுமை தீர்ப்பாயம் நியமித்தது. இந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் எண்ணூர் கழிமுக பகுதி சாம்பல் கழிவுகளால் கடுமையாக மாசடைந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதை சீரமைக்க சாம்பல் கழிவுகள் அகற்றம் உள்ளிட்ட சில பரிந்துரைகளையும் வழங்கி இருந்தது.
ஆனால், அந்த அறிக்கையின் அடிப்படையில் எந்தவித மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தன. வடசென்னை அனல்மின் நிலையத்திலிருந்து சாம்பல் கழிவை எடுத்து செல்லும் குழாய்களில் தொடர்ந்து கசிவு ஏற்பட்டு கொசஸ்தலை ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை சாம்பல் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன் தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது எண்ணூர் கழிமுகத்தில் கொட்டப்பட்ட சாம்பல் கழிவுகளை அகற்றுவது மட்டும் போதாது, முழுமையாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொள்ள வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
பின்னர் அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் சாந்த ஷீலா நாயர் தலைமையில், சென்னை ஐஐடி பேராசிரியர்கள் பாலாஜி நரசிம்மன், இந்துமதி நம்பி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் தாவரவியல் பேராசிரியர் நரசிம்மன், கேர் எர்த் அமைப்பைச் சேர்ந்த ஜெய வெங்கடேசன் மற்றும் ஒரு கடல் சார் உயிரியல் நிபுணர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதிகள் ஆகியோர் கொண்ட கூட்டு நிபுணர் குழு உருவாக்கப்படுகிறது. இக்குழுவுக்கு தலைவராக சாந்த ஷீலா நாயரும், உறுப்பினர் செயலராக தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குநரும் செயல்படுவார்கள்.
இக்குழு, எண்ணூர் கழிமுகத்தில் சாம்பல் கழிவுகளால் நீர், மண், தாவரங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அதை சரி செய்வதற்கு டான்ஜெட்கோ (TANGEDCO) எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு, மேற்கொண்டு அப்பகுதிக்கு பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகள் ஆகியவை குறித்து ஆராய்ந்து, மறுசீரமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை ஒன்றை தயாரித்து 4 மாதங்களுக்குள் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த வழக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT