Published : 09 Dec 2021 03:10 AM
Last Updated : 09 Dec 2021 03:10 AM

பழைய வரைபடங்கள் மூலம் ஆய்வு செய்து தூத்துக்குடியில் - நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் ராட்சத மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் தி.சாரு. படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பழைய வரைபடங்களை வைத்து நீர்வழிப்பாதைகள் குறித்த ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பிரையண்ட் நகர், சிதம்பரநகர், முத்துக்கிருஷ்ணாபுரம், தபால் தந்தி காலனி, ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட இடங்களில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகளை அமைச்சர் பெ.கீதாஜீவன் நேற்று ஆய்வு செய்தார். மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் தேங்கிய தண்ணீரை உடனடியாக மோட்டார் மூலம் வெளியேற்றி விட்டோம். கடந்த 25-ம் தேதி பெய்த கனமழையால் புதிதாக பல இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து மோட்டார்கள் வரவழைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

கடந்த ஆண்டு 13 சென்டி மீட்டர் மழையை சந்தித்தோம். தற்போது முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டதால் கூடுதல் மழை பெய்தும் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது.

முத்துகிருஷ்ணாபுரம், லெவிஞ்சிபுரம் பகுதியில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வேகமாக மழைநீர் வடிந்துள்ளது. முத்தம்மாள் காலனி, ரஹமத்நகர், ராம்நகர் பகுதியிலும் மழைநீர் சுமார்ஒன்றரை அடி வரை குறைந்துள்ளது. அம்பேத்கர் நகர், சிதம்பரநகர், குமரன்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் ஊறிக் கொண்டே இருப்பதால் தேங்கி இருக்கிறது. மாநகரம் முழுவதும் 438 மோட்டார்கள் வைத்து மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது.

மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும், சாலைகளில் தோண்டி குழாய் போடப்பட்ட பகுதிகளில் சிறிய பாலம் அமைக்கவும் ரூ.89 கோடிகேட்டுள்ளோம். மழைநீர் தேங்கும்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணமழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது.

மாநகராட்சி பகுதியில் உள்ளநீர்வழிப்பாதைகளை கண்டறிய உதவி இயக்குநர் (நில அளவை) தலைமையில் தலா ஒரு சர்வேயர், வட்டாட்சியர், உதவியாளர் அடங்கிய 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் பழைய வரைபடங்களை வைத்து மாநகராட்சி பகுதியில் வடக்கில் இருந்து வரும் ஓடைகள், கிழக்கு நோக்கி சென்று கடலில் கலக்கும் நீர்வழித்தடத்தை ஆய்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். ஓரிருநாளில் இப்பணிகள் முடிக்கப்பட்டு, நீர்வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு, நிரந்தரமாக வடிகால் வசதி ஏற்படுத்தப்படும்.

மேலும் பல்வேறு நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதனை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரூ.187 கோடியில் வடிகால் வசதி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தண்ணீரை வெளியேற்றுவதற்கு உரிய பம்பிங் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தனசேகரன் நகர், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.187 கோடி மதிப்பில் ஆசிய வங்கி வளர்ச்சி திட்டத்தின் கீழ் வடிகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் ஸ்மார்ட் சிட்டிதிட்டப் பணிகள் திட்டமிட்டு செயல்படுத்தப்படவில்லை. இதனால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் தி.சாரு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x