Published : 08 Dec 2021 04:09 AM
Last Updated : 08 Dec 2021 04:09 AM
கைத்தறி ஜவுளி மீதான ஜிஎஸ்டி விதிப்பை முற்றிலும் நீக்க வலியுறுத்தி, கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தலைவர் பலராமன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
சேலம் மாவட்டத்தில், கொண்டலாம்பட்டி, மேச்சேரி, நங்கவள்ளி, இளம்பிள்ளை, வேம்படிதாளம், சிந்தாமணியூர், பஞ்சுகாளிப்பட்டி, ஓமலூர், ஜலகண்டாபுரம், வனவாசி உள்ளிட்ட இடங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கைத்தறி பட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். கைத்தறி நெசவுத் தொழிலில், பாரம்பரியம் மிக்க சுத்தப்பட்டு கைத்தறி சேலைகள் நெய்யப்படுகின்றன.
சேலம் மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கைத்தறி நெசவுத் தொழில், பல லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. கடந்த காலங்களில், உள் நாட்டில் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில், வரி விதிப்பு ஏதுமின்றி, சுதந்திரமாக ஜவுளி தொழில் செய்ய மத்திய, மாநில அரசுகள் ஆதரவு வழங்கின.
இந்நிலையில், கைத்தறி நெசவு ஜவுளிகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி-யை மத்திய அரசு வசூலித்து வருகிறது. இதனால், கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து பாவு, பட்டு மற்றும் ஜரிகை கொடுத்து தொழிலை சரிவர செய்ய முடியாமல் பல ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் மற்றும் இதனை நம்பி இருக்கும் பல துணை தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
இச்சூழலில், கைத்தறி ஜவுளிகளுக்கு 5 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டி வரியை, வரும் ஜனவரியில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது கைத்தறி நெசவாளிகள் மற்றும் கைத்தறி நெசவுத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகளுக்கு வாழ்வாதாரத்தை பாதிக்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளது.
கைத்தறி தொழிலுக்கு தேவையான கச்சாப் பட்டின் விலை இரு மடங்காக உயர்ந்துவிட்ட நிலையில், ஜிஎஸ்டி வரியும் உயர்த்தப்படும்போது, இந்த தொழில் மேலும் பாதிக்கப்படும். எனவே, கைத்தறி ஜவுளி தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பை முற்றிலும் நீக்க வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT