Published : 06 Dec 2021 03:09 AM
Last Updated : 06 Dec 2021 03:09 AM

விளமலில் ரூ.1.98 கோடி மதிப்பில் - 1,072 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்

திருவாரூர்

திருவாரூர் அருகே விளமலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,072 பயனாளிகளுக்கு ரூ.1.98 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி

களை உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.

திருவாரூர் அருகே விளமல் ஊராட்சியில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், 1,072 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 98 லட்சத்து 56 ஆயிரத்து 290 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநில உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கி பேசியதாவது:

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களிலேயே 505 தேர்தல் வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளுக்கு மேல் நிறைவேற்றியுள்ளார். அவர் ஆட்சி பொறுப்பேற்றவுடனேயே 12 ஆண்டுகளுக்கு பின்பு நெல்லின் ஆதார விலையை குறுவைக்கு ரூ.1,960 என்பதை ரூ.2,060 ஆக உயர்த்தி உள்ளார். அதேபோல, பொது ரகத்துக்கான ஆதார விலை ரூ.1,940 என்பதை ரூ.2,015 ஆக உயர்த்தி வழங்க உள்ளார்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் 3 லட்சம் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய பணம் விவசாயிகளுக்கு உடனடியாக கிடைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களில் சேமித்து வைத்து, உடனடியாக அரைவை ஆலைக்கு அனுப்ப முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு ஆலைக்கு 500 டன் நெல் அரைக்கும் வகையில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 5 இடங்களில் புதிய அரிசி ஆலைகளை அமைக்க உள்ளோம் என உணவு மானிய கோரிக்கையில் முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல, இந்த 5 மாவட்டங்களில் ஏதாவது ஒரு இடத்தில் ரூ.100 கோடி செலவில் 800 டன் நெல் அரைக்கும் வகையில் ஒரு அரிசி ஆலை நிறுவப்பட உள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) கண்மணி, கோட்டாட்சியர் பாலச்சந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x