Published : 05 Dec 2021 04:09 AM
Last Updated : 05 Dec 2021 04:09 AM

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சிகளில் - 1.54 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு : குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி தகவல்

ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல் ஊராட்சியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை நேற்று நேரில் ஆய்வு செய்த குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி. அருகில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சிகளில் ஜல் ஜீவன் திட்டத்தில் சுமார் 1.54 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் தட்சிணா மூர்த்தி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றில் இருந்து அரக் கோணம் மற்றும் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 11 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.42.3 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள செம்பேடு கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வாலாஜா ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்பாற்கடல் கிராம ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தில் 100 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுடன் சென்று நேற்று ஆய்வு செய்தார்.

திருப்பாற்கடல் ஊராட்சியில் உள்ள 601 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு தண்ணீர்விநியோகம் தொடர்பாக பொதுமக்களிடம் மேலாண் இயக்குநர் தட்சிணாமூர்த்தி கேட்டறிந்தார். பின்னர், கிராம சேவை மையத்தில் பொதுமக்களிடம் தட்சிணாமூர்த்தி பேசும்போது, ‘‘ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 12,525 கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சிகளில் சுமார் 2 லட்சத்து 4 ஆயிரம்குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதுவரை 75 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு சுமார் 1.54 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி வரும் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

குடிநீர் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்ய குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகள் இணைந்து தண்ணீரை பரிசோதித்து விநியோகம் செய்ய உள்ளனர். இதற்காக, ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் மகளிர் குழுக்களை சேர்ந்த 5 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு தண்ணீர் பரிசோதனை செய்வது குறித்து பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் வீடுகளில் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்து உடனுக்குடன் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். தேர்வு செய்யப்பட்டுள்ள மகளிர் குழுவினர் தினசரி உங்கள் பகுதிகளில் தண்ணீரை பரிசோதனை செய்கிறார்களா? என்பதை பொதுமக்கள் கண்காணிக்க வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு குடிநீர் திட்டப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் ஆனந்த்ராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதன்மை பொறியாளர் ரவீந்திரன், கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகர், செயற் பொறியாளர் ஆறுமுகம், நிலநீர் வல்லுநர் ராமன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் னிவாசன், ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x