Published : 02 Dec 2021 03:08 AM
Last Updated : 02 Dec 2021 03:08 AM

வளாகங்களில் 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கி நிற்பதால் - தூத்துக்குடியில் பள்ளிகளை திறப்பதில் சிரமம் : ஒரே நாளில் 3 இடங்களில் மக்கள் சாலை மறியல்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒரு வாரத்துக்கு மேலாகியும் பல இடங்களில் மழைநீர் வடியாததால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். சுமார் 400 மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. டேங்கர் லாரிகள் மூலமும் மழைநீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு, அகற்றப்படுகிறது.

நேற்றுமுன்தினம் இரவும் தூத்துக்குடி பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. தொடர்ந்துபெய்யும் மழை மற்றும் ஊற்றெடுக்கும் நிலத்தடி நீர் காரணமாக தூத்துக்குடியில் மழைநீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர்.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி, ராம் நகர், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அம்பேத்கர் நகர், பிரையன்ட் நகர், சிதம்பரநகர் பகுதிகளில் வீடுகளைச் சூழ்ந்து 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இதேபோல தூத்துக்குடி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், இஎஸ்ஐ மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் வடியாமல் நிற்பதால், நோயாளிகள் மற்றும்பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மையவாடி பகுதியில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி நிற்பதால் உடல்களை அடக்கம் செய்ய வருவோர் மற்றும்தகனம் செய்ய வருவோர் அவதிக்குள்ளாகின்றனர்.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள பெரும்பாலான பள்ளி வளாகங்களிலும் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தூத்துக்குடி விஇ சாலையில் உள்ள சி.வா. அரசுமேல்நிலைப்பள்ளி வளாகம் தண்ணீரில் மிதக்கிறது. இந்த பள்ளி வளாகத்தில் தான் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட அலுவலகம் போன்ற முக்கிய கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தஅலுவலகங்களுக்கு வரும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.

பெருமாள்புரம் பகுதியில் உள்ள பாரதியார் வித்யாலயம் பள்ளிவளாகம் முழுவதும் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் யாரும் உள்ளே செல்ல முடியவில்லை. தூத்துக்குடி பகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இதே நிலை தான் காணப்படுகிறது.

மழை காரணமாக கடந்த 25-ம்தேதி பிற்பகலில் இருந்து மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு வருகிறது. நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. மழைநீர் வடியாமல் நிற்பதால் பள்ளிகளை மீண்டும் திறப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி வட்டம், மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (2-ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

3 இடங்களில் மறியல்

வீடுகளைச் சூழ்ந்து நிற்கும் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நேற்று 3 இடங்களில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி எட்டயபுரம் சாலை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிமக்கள் மறியலில் ஈடுபட்டபோது, அமைச்சர் கீதாஜீவன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதேபோல அம்பேத்கர் நகர் பகுதி மக்களும் மறியல் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி முத்தம்மாள்காலனி, ராம் நகர், ரஹ்மத் நகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எட்டயபுரம் சாலையில் மறியல் செய்தனர். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் சாரு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மழை அளவு விவரம்

மாவட்டத்தில் நேற்று முன்தினம்இரவும் பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று காலை 6 மணிவரையிலான 24 மணி நேரத்தில்பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 10,காயல்பட்டினம் 5, குலசேகரன்பட்டினம் 12, விளாத்திகுளம் 2,காடல்குடி 3, வைப்பார் 5, சூரன்குடி 13, கோவில்பட்டி 12, கழுகுமலை 5, ஓட்டப்பிடாரம் 1, மணியாச்சி 4, கீழ அரசடி 7, எட்டயபுரம் 1.4, சாத்தான்குளம் 21.4, வைகுண்டம் 1, தூத்துக்குடியில் 11.6 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x