Published : 01 Dec 2021 06:39 AM
Last Updated : 01 Dec 2021 06:39 AM

நள்ளிரவில் காற்றுடன் பெய்த கன மழையால் - கொடைக்கானல், சிங்கம்புணரியில் சாய்ந்த மரங்கள் : திருச்சுழி அருகே வீடு இடிந்தது; கவுசிகா நதியில் வெள்ளப் பெருக்கு

கொடைக்கானல் வில்பட்டி பிரிவு அருகே சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றும் தீயணைப்பு வீரா்கள்.

திண்டுக்கல்

கொடைக்கான‌லில் நேற்று முன்தினம் இரவு முதல் காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் கொடைக்கான‌ல்-ப‌ழ‌நி இடையே ம‌லைச் சாலையில் ஆனைகிரி சோலைப்ப‌குதி மற்றும் கொடைக்கான‌ல் அருகேயுள்ள வில்ப‌ட்டி பிரிவு ஆகிய இடங்களில் மரங்கள் சாலையின் குறுக்கே சாய்ந்தன.

மின் க‌ம்பிக‌ள் மீது மரம் சாய்ந்ததால் வில்ப‌ட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ம‌லைக் கிராம‌ங்களுக்கு மின்விநியோக‌ம் துண்டிக்கப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. திருச்சுழி அருகே உள்ள நல்லாங்குளத்தில் பாஸ்கரன் என்பவரது வீடு இடிந்தது.

மாவட்டத்தில் நேற்று காலை வரை பெய்த மழையளவு (மி.மீ) அருப்புக்கோட்டை- 34, சாத்தூர்- 38 , வில்லிபுத்தூர்- 49, சிவகாசி- 65, விருதுநகர்- 53, திருச்சுழி- 39, ராஜபாளையம்- 32, காரியாபட்டி- 18, வத்திராயிருப்பு- 59, பிளவக்கல்- 31, வெம்பக்கோட்டை- 25.40, மாவட்டத்தில் அதிகபட்சமாக கோவிலாங்குளத்தில் 72.40 மி.மீ. மழை பதிவானது. மழை பெய்தும் விடுமுறை அளிக்கப்படாததால் மாணவர்கள் மழையில் நனைந்தவாறு பள்ளிக்குச் சென்றனர்.

நீர்வரத்து அதிகரித்ததால் விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. கவுசிகா நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி அருகே அணியம் பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. இதில் பள்ளிக் கட்டிடம், சுற்றுச்சுவர் சேதமடைந்தது.

சிவகங்கை அருகே வேம்பத்தூரில் கோயில் குளம் நிரம்பி அருகேயுள்ள மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் தண்ணீர் புகுந்தது. செந்தில்நாதன் எம்எல்ஏ, மாவட்டக் கவுன்சிலர் ராமசாமி, ஒன்றியக் கவுன்சிலர் தர் பார்வையிட்டனர். தொடர்ந்து வளாகத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்ற கோட்டாட்சியர் முத்துக்கழுவன் தலைமையிலான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

மழையளவு (மி.மீ.ல்): மானாமதுரை-37, இளையான் குடி-38, திருப்புவனம்-95.20, தேவகோட்டை-17.60, காரைக் குடி-1.60, திருப்பத்தூர்-11.50, காளையார்கோவில்-37, சிங்கம்பு ணரி-17.40 மி.மீ.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த மழை யால் அஞ்சுகோட்டை, ஆதியூர் உள்ளிட்ட கண்மாய்கள் நிரம்பி தண்ணீர் திருவெற்றியூருக்கு செல்கிறது.

கால்வாயில் செல்ல முடியாத நீர் பெருக்கெடுத்து வயல் வெளிகளிலும், ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருந்தகத்தை சுற்றி தேங்கியுள்ளது.

இதனால் சுமார் 150 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது. மேலும் ஆரம்ப சுகாதார நிலை யத்துக்கு நோயாளிகள் செல்ல முடியாத நிலையும், கால்நடை மருந்தகத்துக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x