Published : 01 Dec 2021 06:40 AM
Last Updated : 01 Dec 2021 06:40 AM
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன், வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியர் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தொடர்ந்து விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், விவசாயிகள் கருப்பையா, சேதுராமன், முகேஷ், ஆகியோர் பேசும்போது, ‘‘கூட்டுறவு சங்கங்களில் இனி வழங்கப்படும் கடன்தொகைகளுக்கு இடுபொருட்களை வழங்காமல், பணமாக வழங்க வேண்டும்.
வங்கிக் கடன் நிறுத்தப்படுவதாக தகவல் வருகிறது. அதை காலநீட்டிப்பு செய்ய வேண்டும். யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்கியிருப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகம் எழுகிறது.
நன்னிலம் பகுதியில் 1.3 ஹெக்டேர் பரப்பளவுக்கு சேதமடைந்துள்ளதாக கூறும் பயிர்க் காப்பீடு நிறுவனம், மன்னார்குடி பகுதியில் 1,623 ஹெக்டேர் பரப்பளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதுகுறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களில் கடன் கிடைக்காத நிலை உள்ளது. இதற்கு காரணம், தற்போதுள்ள கூட்டுறவு சங்க தலைவர்கள் முறையாக பணியாற்றாததே. எனவே, கூட்டுறவு சங்கங்களை கலைத்துவிட்டு, புதிதாக நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.
பின்னர், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் பேசும்போது, ‘‘கூட்டுறவு சங்கங்களை கலைப்பதற்கு சட்டத்தில் இடமில்லை. எனவே, சங்க நடவடிக்கைகளை கவனித்து விவசாயிகள் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மேலும், கூட்டுறவு சங்கங்களின் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், கூட்டுறவு துறை இணை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT