Published : 01 Dec 2021 06:40 AM
Last Updated : 01 Dec 2021 06:40 AM
கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளிடம் இருந்து 97 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் பெற்றுக்கொண்டார்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:
விவசாயிகள்: ராணிப்பேட்டை மாவட்டம் சாத்தூர் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் தொடக்க வேளாண்மை சங்கம் அமைக்க வேண்டும்.
ஆட்சியர்: கூட்டுறவுத் துறையினர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்கள்.
விவசாயி: தக்கோலத்தில் நெல் கொள்முதல் நிலையம் விரைவாக தொடங்க வேண்டும்.
ஆட்சியர்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிசம்பர் 10-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளன. தற்போது 13 இடங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் நெல் கொள்முதல் செயல்பட உள்ளது.
உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக விவசாய நிலங்கள் சரிபார்க்கப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் சேர்க்க வேண்டும்.
விவசாயி: ஐரோப்பிய நாடுகளில் உள்ள வெள்ளரிக்காய் மற்றும் கொடைமிளகாய் போன்ற சாகுபடிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொள்முதல் நிலை யம் அமைக்க வேண்டும்.
ஆட்சியர்: தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை விற்பனைத்துறை மூலம் ஆலோ சித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி: ஆற்காடு அடுத்த கலவை நாகவேலி கிராமத்தில் கனமழையால் நெற்பயிர் சேத மடைந்துள்ளது. இதற்கான பயிர் காப்பீடு விரைவாக வழங்க வேண்டும்.
ஆட்சியர்: பயிர் சேதாரங்கள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள் ளப்பட்டு, காப்பீடு நிறுவனங் களுடன் கலந்தாலோசித்து முடிவு தெரிவிக்கப்படும்.
விவசாயி: திமிரி ஒன்றியத்தில் பி.எம்.கிஷான் திட்டத்தில் 5 தவணைகள் பெறப்பட்டுள்ளன. மேற்கொண்டு தவணை பெறப்பட வில்லை.
ஆட்சியர்: ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, பருவமழையால் பாதிப்படைந்த வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத்துறை பயிர்களுக்கு உரிய இழப்பீடு, பயிர் காப்பீடு திட்ட இழப்பீடு, ஏரிக்கால்வாய் தூர்வாரி சீரமைப்பது, பாலாறு பொன்னையாற்றில் தடுப்பணைகள் கட்டி தண்ணீர் சேமிப்பது, நேரடி நெல் கொள்முதல் நிலையம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் திறப்பது குறித்த விவசாயிகளின் பொதுவான பிரச்சினைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் வேலாயுதம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஸ்வநாதன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் லதாமகேஷ், வேளாண்மை உதவி இயக்கு நர்கள், அலுவலர்கள், விவசாயிகள் உட்பட கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT