Published : 28 Nov 2021 03:09 AM
Last Updated : 28 Nov 2021 03:09 AM

தூத்துக்குடி நகரில் வடியாத வெள்ளம் :

கடம்பாகுளம் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீர் வரண்டியவேல் - ஆத்தூர் இடையே அதிகளவு செல்வதால், இப்பகுதி வழியாக தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. (அடுத்த படம்) ஏரல் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ளம். (கடைசி படம்) தூத்துக்குடி ரஹ்மத் நகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்குள்ள மக்களை மாவட்ட தீயணைப்பு அதிகாரி குமார் தலைமையிலான தீயணைப்பு படையினர் ரப்பர் படகு மூலம் மீட்டனர். படங்கள்:என்.ராஜேஷ்

தூத்துக்குடி/கோவில்பட்டி

கனமழையால் தூத்துக்குடி மாநகரின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. நேற்று மழை குறைந்தும் தண்ணீர் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி பிரையண்ட் நகர், சிதம்பர நகர், குறிஞ்சி நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ராஜபாண்டி நகர், கதிர்வேல் நகர், கோகூர் உள்ளிட்ட இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர்.

மாவட்ட தீயணைப்பு அதிகாரி குமார் தலைமையிலான தீயணைப்பு படையினர் ரஹ்மத் நகர் உள்ளிட்ட இடங்களில் வீடுகளில் சிக்கித் தவிப்போரை ரப்பர் படகுகள் மூலம் மீட்டு அழைத்து வந்தனர். சுமார் 200 ராட்சத மோட்டார்கள் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எம்.பி. ஆய்வு

தூத்துக்குடி மாநகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மீட்பு நிவாரணப் பணிகளை மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், எம்.சி.சண்முகையா எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையர் தி.சாரு உள்ளிட்டோர் பார்வை யிட்டனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கினர்.

வெள்ளப்பெருக்கு நீடிப்பு

தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. வைகுண்டம் அணையைத் தாண்டி நேற்று காலை 32 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு வீணாகச் சென்றது. மாலையில் சுமார் 26 ஆயிரம் கன அடி தண்ணீராக குறைந்தது. ஏரல் தரைப் பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது. தாமிரபரணி கரையோரங்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மருதூர் அணை நிரம்பியது

தாமிரபரணி ஆற்றில் 7-வது அணைக்கட்டான மருதூர் அணைக்கட்டு 4,000 அடி நீளம் கொண்டது. இந்த அணை நிரம்பி வழிகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்யும் மழை காட்டாறு வழியாக கலியாவூர் பெரியகுளத்துக்கு வந்து சேர்கிறது.

இந்த குளம் நிரம்பி மறுகால்பாய்வதால், சீவலப்பேரியிலிருந்து கலியாவூர் செல்லும் சாலையில் சந்தைபேட்டை அருகே சாலையைதண்ணீர் மூழ்கடித்தது. தண்ணீர் வேகம் அதிகமாக இருந்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சடையநேரி கால்வாய்க்கு தண்ணீர் கொடுக்கும் கால்வாய் குளம் நிரம்பி விட்டது. இதனால் சடையநேரி கால்வாய்க்கு செல்லும் மதகுகள் திறக்கப்பட்டன. அப்பன்குளம் உடைந்து தண்ணீர் வெள்ளூர் குளத்துக்கு சென்று, அக்குளமும் நிரம்பி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் கலந்தது.

வைப்பாற்று தடுப்பணை மதகின் திறவுகோல் மாயம்

கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட நம்பிபுரம் வைப்பாற்று தடுப்பணை நிரம்பி வழிகிறது. கீழ நம்பிபுரம் தடுப்பணையின் நீர்பிடிப்பு பகுதியில் வேலிக்கருவை மரங்கள் அதிகம் முளைத்துள்ளன. அதனை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தடுப்பணை சுவற்றின் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மதகில் திறவுகோல் பொருத்தப்பட்டிருந்தது. அதில் வடபுறமுள்ள மதகின் திறவுகோலை காணவில்லை. இதனால் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தண்ணீரை ஆற்றில் திறந்துவிட முடியாத நிலை ஏற்படும். கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. மதகில் திறவுகோல் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x