Published : 26 Nov 2021 03:10 AM
Last Updated : 26 Nov 2021 03:10 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இதுவரை 4,660 கல்வி தன்னார்வலர்கள் இணைந்துள்ளதாக அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 'இல்லம் தேடி கல்வி' விழிப்புணர்வு கலைப்பயண தொடக்கவிழா நடைபெற்றது. தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் விழிப்புணர்வு கலைப்பயண குழுவினருக்கு சீருடைகள் வழங்கி, கலைப்பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:
தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட 'இல்லம் தேடி கல்வித் திட்டம்' தொடர்பான விழிப்புணர்வு கலைப்பயணம் பரீட்சார்த்த முறையில் 12 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இத்திட்டம் தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இல்லம் தேடி கல்வித் திட்டம் பொதுமக்கள், பெற்றோர், தன்னார்வலர் மற்றும் பள்ளி மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 1.66 லட்சம் தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு இல்லம் தேடிச் சென்று கல்வி கொடுப்பதற்காக இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 2,162 குடியிருப்பு பகுதிகளில் கல்வி கற்பிக்க 4,660 கல்வித் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். மாவட்டத்தில் முதல் கட்டமாக 1,400 குடியிருப்புகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் இன்னும் அதிகமான கல்வித் தன்னார்வலர்கள் பதிவு செய்யும் பொருட்டு இந்த விழிப்புணர்வு கலைப்பயணம் நடைபெறவுள்ளது. பயிற்சி பெற்ற 90 கலைஞர்கள் 9 குழுக்களாக பிரிந்து மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வளாகங்களில் பள்ளி வேலை நேரத்திலும், மக்கள் வசிக்கும் அனைத்து குடியிருப்புகள், பொதுமக்கள் கூடுமிடங்களில் மாலை நேரத்திலும் கலைநிகழ்ச்சிகள் நடத்துவார்கள் என்றார்.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தி.சாரு முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (பயிற்சி) சுடலைமுத்து, உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT