Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்க வேண்டும் எனவும், வைக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் சு.வினீத் எச்சரித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வுகூட்டம், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், குழந்தைகள் கடத்தல் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு ஏடிஎஸ்பி பொன்னுசாமி ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு தலைமை வகித்துமாவட்ட ஆட்சியர் சு.வினீத் பேசும்போது, ‘‘அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்க வேண்டும்.அதில் ஏதேனும் பள்ளி மாணவ, மாணவிகள் புகார்கள் அளித்தால், தலைமை ஆசிரியர்கள் கண்ணியத்துடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1098, 181 மற்றும் 14471 ஆகிய இலவச எண்களை மாணவர்கள் பார்வையில்படும்படி, பள்ளியின் பல்வேறு இடங்களில் எழுதி வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
புகார் பெட்டிகள் வைக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸார் செயலிஏதேனும் இருந்தால், அவற்றை யும் அங்கு விழிப்புணர்வுக்கு வைக்கலாம்,’’ என்றார்.
மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சசாங் சாய் பேசும்போது, ‘‘மாணவர்கள் பள்ளி கழிவறைகளில் எழுதி வைப்பது உள்ளிட்ட செயல்களை கவனித்து, தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி பொதுவான இடம் என்பதால் அங்கு பேதம் என்பதை எப்போதும் ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது,’’ என்றார்.
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆறுச்சாமி, பெண் காவல் ஆய்வாளர்கள் என பலரும் பேசினர். திருப்பூர்,பல்லடம், உடுமலை, தாராபுரம்கல்வி மாவட்டங்களை சேர்ந்தஅலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT