Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்டங்களுக்கு தமிழக அரசின் சார்பில் 6,288 வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 2006-2011-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வர் கருணாநிதி, தமிழக மக்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கும் திட்டத்தை அறிவித்து, நடைமுறைப்படுத்தினார்.
2011-ம் ஆண்டுக்கு பிறகு அதிமுக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட இலவச தொலைக்காட்சி பெட்டிகள் அரசுப்பள்ளிகள், மாநகராட்சி, வருவாய்அலுவலகங்களில் உள்ள கிடங்குகளில் வைக்கப்பட்டன.
இந்நிலையில் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளின் நிலை மற்றும் அதன் எண்ணிக்கையை சரிபார்க்கவும், நல்ல நிலையில் இயங்கும் தொலைக்காட்சி பெட்டிகளை அரசுப் பள்ளிகளுக்கு வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல அலுவலகத்தில் 2,070தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில், 832 பழுதடைந்திருந்தது தெரியவந்தது. எஞ்சியவற்றை லாரி மூலம் பல்வேறு பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நேற்று நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர்கள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், உடுமலை மற்றும்தாராபுரம் ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன.
பள்ளிகளில் கல்வித் தொலைக்காட்சிக்கும் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பயன்பாட்டுக்கும் இந்த தொலைக்காட்சி பெட்டிகள் பயன்படுத்தப்படும். தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 4-ம், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 7-ம் என்ற எண்ணிக்கையில் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட உள்ளன.அதன்படி திருப்பூருக்கு1,964,தாராபுரத்துக்கு 1,929, உடுமலைக்கு1,238, பல்லடத்துக்கு 1,157 என 4 கல்வி மாவட்டங்களுக்கு மொத்தம் 6,288 தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT