Published : 20 Nov 2021 03:08 AM
Last Updated : 20 Nov 2021 03:08 AM
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று ஆய்வு செய்தார்.
இது குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறியது:
ஆந்திர மாநிலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக காஞ்சிபுரம் பாலாற்றில் செய்யாற்றில் இருந்து 40 ஆயிரம் கன அடிநீர் மற்றும் பாலாற்றில் இருந்து 1,20,000 ஆயிரம் கனஅடி நீர் என மொத்தம் 1,60,000 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு நீர் 100 ஆண்டுகளுக்கு முன்புதான் வந்ததாக இந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கினறனர்.
இந்த வெள்ளம் காரணமாக காஞ்சிபுரம் பகுதியில் பெரும்பாக்கம், விஷார், செவிலிமேடு, உத்தரமேரூர் மற்றும் வாலாஜாபாத் பகுதியில் உள்ள வில்லிவலம், சீயமங்கலம், ஓயம்பாக்கம், புளியம்பாக்கம் போன்ற கிராமப்புற ஆற்றங்கரையோர மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 679 பேர் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் போன்ற அரசு நிவாரண முகாமக்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆற்று வெள்ளத்தில் 137 கால்நடைகள்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி பாதுகாப்பாக மாவட்ட நிர்வாகம் தங்க வைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த ஆற்றங்கரையோரப் பகுதிகளில் கிட்டத்தட்ட 137 கால்நடைகள் ஆடு, மாடு போன்றவையும் இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பொருட்களை இழந்த மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலாற்றங்கரையில் நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளதால் வாலாஜாபாத் போன்ற பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வாலாஜாபாத் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வரை பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லை என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஆ.மனோகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT