Published : 19 Nov 2021 03:11 AM
Last Updated : 19 Nov 2021 03:11 AM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது.
மாநிலச் செயற்குழு உறுப்பினர் கோ.பழனிசாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் சிறப்புரையாற்றினார். தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநிலத் துணைச் செயலர் மூ.வீரபாண்டியன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் நா.பெரியசாமி, க.சந்தானம், பொருளாளர் எம்.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின் இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியது: மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணம் போதுமானதல்ல. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விவசாய சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. எனவே, இதனை முதல்வர் மறுபரிசீலனை செய்து அறிவிக்க வேண்டும்.
மேலும், தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேட்டு நிலங்களில் பயிரிடப்பட்ட கடலை உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. உப்பு உற்பத்தியும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே, இவற்றுக்கு வரும் 20-ம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் உரிய தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் நடேச.தமிழார்வன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீடாமங்கலம் காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
ஜெய்பீம் படம் குறித்து இரு கட்சிகள் மட்டுமே அவதூறும், மிரட்டலும் விடுத்து வருகின்றன. இதன் மூலம், தங்களது கட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும், அரசியல் ஆதாயம் பெறவும் இரு கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன. இந்தக் குறுகிய நோக் கம் வெற்றி பெறாது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT