Published : 19 Nov 2021 03:11 AM
Last Updated : 19 Nov 2021 03:11 AM

2 மணி நேரம் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு - தூத்துக்குடி அருகே தரைப்பாலம் மூழ்கியது : போக்குவரத்து பாதிப்பு, 100 ஏக்கர் வாழை பயிர்கள் சேதம்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்தது. கோரம்பள்ளம் குளத்தில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் அத்திமரப்பட்டி- காலாங்கரை இடையேயான தரைப்பாலம் மூழ்கியது. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று முன்தினம் இரவில் மீண்டும் கனமழை பெய்தது. வைகுண்டம் பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டியது. பலத்த காற்று மற்றும் மின்னலுடன் மழை பெய்ததால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் கயத்தாறு, கடம்பூர், மணியாச்சி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், சூரன்குடி, காயல்பட்டினம் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஏற்கெனவே தேங்கிய மழைநீர் ஓரளவுக்கு வெளியேற்றப்பட்ட நிலையில், மீண்டும் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீ்ர தேங்கியுள்ளது.

தூத்துக்குடி சிதம்பரநகர், பிரையண்ட் நகர், டூவிபுரம், அண்ணாநகர், ராஜீவ் நகர், தபால் தந்தி காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, முத்தம்மாள் காலனி, குறிஞ்சிநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மாநகராட்சி அதிகாரிகள் மூலம் ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் மழை பெய்யாததால் தண்ணீர் வேகமாக வடிந்து வருகிறது.

மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர், மணியாச்சி, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு நள்ளிரவில் கோரம்பள்ளம் குளத்தை வந்தடைந்தது. ஏற்கெனவே இக்குளம் நிரம்பும் நிலையில் இருப்பதால் பாதுகாப்பு கருதி குளத்துக்கு வந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.

தரைப்பாலம் மூழ்கியது

நேற்று அதிகாலையில் 6 மதகுகள் மூலம் உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் கோரம்பள்ளம் குளத்தில் இருந்து உபரிநீர் கடலுக்கு செல்லும் உப்பாறு ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அத்திமரப்பட்டி- காலாங்கரை கிராமங்களுக்கு இடையே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் பாய்ந்தது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் குளத்துக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததை தொடர்ந்து காலை 10 மணியளவில் 2 மதகுகள் அடைக்கப்பட்டன. இதனால் உப்பாறு ஓடையில் ஏற்பட்ட வெள்ளமும் படிப்படியாக குறையத் தொடங்கியது.

கோரம்பள்ளம் குளத்தில் இருந்து வெளியேறிய உபரிநீர் அத்திமரப்பட்டி, காலாங்கரை பகுதியில் உள்ள வாழைத் தோட்டங்களில் புகுந்தது. இதனால் சுமார் 100 ஏக்கர் வாழை பயிர்கள் மூழ்கின.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வைகுண்டம் அணையை தாண்டி 11,200 கன அடி தண்ணீர் கடலுக்கு வீணாகச் சென்று கொண்டிருந்தது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதிகாரிகள் 24 மணி நேரமும் கரையோர பகுதிகளை கண்காணித்து வருகின்றனர்.

மழை அளவு விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 32, காயல்பட்டினம் 80, குலசேகரன்பட்டினம் 35, விளாத்திகுளம் 60, காடல்குடி 37, வைப்பாறு 47, சூரன்குடி 86, கோவில்பட்டி 37, கழுகுமலை 37, கயத்தாறு 91, கடம்பூர் 50, ஓட்டப்பிடாரம் 42, மணியாச்சி 64, வேடநத்தம் 35, கீழ அரசடி 13, எட்டயபுரம் 35.2, சாத்தான்குளம் 14.4, வைகுண்டம் 94, தூத்துக்குடி 37.

மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 48.77 மி.மீ., மழை பெய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x