Published : 15 Nov 2021 07:13 AM
Last Updated : 15 Nov 2021 07:13 AM
டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ள 35 லட்சம் நெல் மூட்டைகளை உடனே இயக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியுசி தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு, இயக்கம் செய்யப்படாமல் 35 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால், அவை மழையில் நனைந்து, நெல்மணிகள் முளைவிட்டு, வீணாகும் அபாய நிலையில் உள்ளன.
குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கட்டக்குடி, வடுவூர் வடபாதி, காரைக்கோட்டை, வடுவூர் புதுக்கோட்டை, மேல நெம்மேலி உள்ளிட்ட கொள்முதல் நிலையங்களில் தலா 15,000 மூட்டைகள் வரை தேங்கியுள்ளன. இதனால் ஏற்படும் இழப்புகள் கொள்முதல் பணியாளர்கள் அல்லது சேமிப்பு நிலையங்களில் பணிபுரிபவர்கள் மீது சுமத்தப்படும் நியாயமற்ற நடவடிக்கை தொடர்கிறது.
எனவே, கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக அரைவை ஆலைகளுக்கு அனுப்பி, வீணாகாமல் அரிசியாக்குவதற்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT