Published : 13 Nov 2021 03:10 AM
Last Updated : 13 Nov 2021 03:10 AM
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் 463 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் வெள்ளச்சேத பாதிப்புகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல இடங்களில் அதிக கன மழை பதிவாகியுள்ளது. மாவட்ட அளவில் அதிகபட்ச அளவாக வாலாஜாவில் 113.66 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அரக்கோணம் 67.4, ஆற்காடு 21.4, காவேரிப்பாக்கம் 51, அம்மூர் 36.65. சோளிங்கர் 67.2, கலவை 61 மி.மீ மழை பதிவாகியுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 157 பேர் இரண்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 33 குடிசை, ஓட்டு வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.
மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மகேந்திரவாடி பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால், ஏரியின் கடைவாயில் அருகேயுள்ள தரைப்பாலத்தின் மீது ஒரு அடி உயரத்துக்கு உபரிநீர் வெளியேறி வருவதால் சாலையின் இரண்டு பக்கமும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர் ஆய்வு
தக்கோலத்தில் இருந்து திருவாலங்காடு செல்லும் சாலையில் கல்லாற்றின் குறுக்கே பாலம் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக தார்ச்சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை, அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்து மாற்று ஏற்பாடுகளை விரைவாக செய்ய உத்தரவிட்டார். அதேபோல், அரக்கோ ணம்-நெமிலி சாலையில் கல்லாறு தரைப்பாலத்தை கடந்து அதிகளவில் தண்ணீர் செல்வதை அமைச்சர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பயிர் சேதம் விவரம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் 7 வட்டாரங்களில் 447 ஹெக்டேர் நெல், 16 ஹெக்டேரில் இதர பயிர்கள் என மொத்தம் 463 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.33%-க்கு பாதிப்புக்கு மேல் 127 ஹெக்டேரில் நெல், 7 ஹெக்டேரில் இதர பயிர்கள் சேதமடைந்திருப்பது வேளாண் துறையினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT