Published : 08 Nov 2021 01:09 AM
Last Updated : 08 Nov 2021 01:09 AM

செங்கை மாவட்டத்தில்220 ஏரிகள் நிரம்பின :

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழையால் 2,512 ஏரிகளில், 220 ஏரிகள் முழு அளவில் நிரம்பியுள்ளதாகவும், ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாகவும் ஊரக வளர்ச்சித் துறையினர் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக விடாமல் பெய்து வருகிறது. பகலில் விட்டுவிட்டு பெய்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் விடாமல் அடைமழை பெய்து வருகிறது. இம்மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் செங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 2,512 ஏரிகளில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

இதில் திருப்போரூர், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் 220 ஏரிகள் முழு அளவில் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. மேலும், 75% வரை 318 ஏரிகளிலும், 50% 464 ஏரிகளிலும், 25% 490 ஏரிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், நிரம்பிய ஏரிகள் உடையாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வளத் துறையின் கீழ் உள்ள 574 ஏரிகளில், நேற்றைய நிலவரப்படி, 60 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

இதில், கொசஸ்தலை ஆறு வடிநிலக் கோட்டத்தின்கீழ் உள்ள 324 ஏரிகளில், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் உட்பட 47 ஏரிகளும், ஆரணி ஆறுவடிநில கோட்டத்தின்கீழ் உள்ள 250 ஏரிகளில், ஊத்துக்கோட்டை, ஆரணி, கவரப்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள 13 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

அதுமட்டுமல்லாமல், நீர்வளத் துறையின் கீழ் உள்ள ஏரிகளில் 30-ல் 75%க்கு மேலாகவும், 49-ல் 50%க்கு அதிகமாகவும், 165-ல் 25%க்கு மேலாகவும் நீர் இருப்பு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x