Published : 08 Nov 2021 01:10 AM
Last Updated : 08 Nov 2021 01:10 AM

தங்கச் சப்பரத்தில் ஜெயந்திநாதர் பவனி : திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் நான்காம் நாளான நேற்று சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் உலா வந்தார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் கந்த சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம் ஹாரம் நாளை (நவ.9) மாலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 4-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் விரதமிருக்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நான்காம் நாளான நேற்று சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் உலா வந்தார். சஷ்டி விழாவின் 6-ம் நாளான நாளை (நவ.9) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார்.

பின்னர் கோயில் கடற்கரை முகப்பில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழாவின் 7-ம் நாளான நவம்பர் 10-ம் தேதி நடைபெறும் திருக்கல்யாணம் நிகழ்விலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.

பக்தர்கள் கூட்டம்

கடந்த 2 நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதால் திருச்செந் தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x