Published : 07 Nov 2021 03:08 AM
Last Updated : 07 Nov 2021 03:08 AM
திருவாரூர் அருகே தப்பளாம் புலியூர் தொடக்க வேளாண்மை தரிசு நிலத்துக்கு பயிர்க் காப்பீடு செய்து ரூ.6.50 லட்சம் முறைகேடு நடந்துள்ளது ஆய்வில் தெரியவந்ததால், அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவு சங்கத் தலைவரை தற்காலிக பதவி நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2018-19-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கூட்டுறவு சங்கத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதில் அலிவலம் கிராமத்தைச் சேர்ந்த 12 பேரின் தரிசு நிலத்துக்கு, விவசாயம் செய்ததாகக் கூறி பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஆகியோரிடம் அப்பகுதி விவசாயிகள் புகார் அளித்திருந்தனர்.
இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில், ரூ.6,50,376 முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் ரவி மற்றும் இயக்குநர்கள், ஊழியர்கள் ஆகியோரிடம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே இந்தத் தொகையில் ரூ.3,01,277 சங்கத்தில் மீண்டும் வரவு வைக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், விசாரணையில் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளதால், அந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ரவியை தற்காலிக பணி நீக்கம் செய்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சித்ரா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தப்பளாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ரவி, சங்கத்துக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியது, நம்பிக்கை மோசடி செய்தது, சங்கத்தை தவறாக வழி நடத்தியது, குற்ற நோக்குடன் பொய்யான ஆவணங்களை தயாரிக்க காரணமாக இருந்தது, தவறான நடத்தையுடன் செயல்பட்டது உள்ளிட்ட காரணங்களால் சங்கத்தின் நலன் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சங்கத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பான விசாரணை முடியும் வரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார்.
மேலும் தற்சமயம் சங்கத்தின் துணைத்தலைவர் தங்கையன் என்பவர் தலைவர் பொறுப்பில் செயல்படுவார் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT