Published : 04 Nov 2021 03:13 AM
Last Updated : 04 Nov 2021 03:13 AM
உரங்களை மாற்றி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை எச்சரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், சிறுதானிய பயிர்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் உத்தண்டராமன் தலைமையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சங்கரநாராயணன் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வில்லிபுத்தூர் மற்றும் நரிக்குடி வட்டாரங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, உரக்கடைகளில் உர பதுக்கல் உள்ளதா எனவும், இருப்பில் உள்ள உரங்களை புதிய விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கவும், விற்பனையாளர்கள் புதிய உரிமம் மற்றும் புதுப்பித்தல் போன்ற பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்கப்பட்டுள்ளதா எனவும், ஆதார் எண் கொண்டு உரம் மற்றும் வேளாண் இடுபொருட்கள் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், மேற்படி ஆய்வில் விருதுநகர் மாவட்டத்தில் அமோனியம் சல்பேட் எனக்கூறி மக்னீசியம் சல்பேட் உரத்தை தவறாக விவசாயிகளுக்கு வழங்கியது ஒருசில இடங்களில் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 30 நாட்களுக்கு உர உரிமம் ரத்து செய்யப்பட்டது.
விவசாயிகள் பயிர்களுக்கு தேவைக்கு அதிகமாக யூரியா உரம் இடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், அவ்வாறு இடுவதால் மண்வளம் பாதிக்கப் படுவதோடு, பூச்சி, நோய் தாக்குதலுக்கு பயிர் ஆளாக நேரிடும். இதனை தடுத்திடும் பொருட்டு, விவசாயிகளுக்கு உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் மண் புழு உரங்கள், இயற்கை உரங்களையும் சேர்த்து பயன்படுத்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
மேலும், ரசாயன உரங்களுடன் தேவையற்ற இதர உரங்களை வாங்க கட்டாயப்படுத்தவோ, ரசாயன உரங்களுடன் சேர்த்தோ வழங்கக் கூடாது எனவும், தேவையில்லாத உரங்களை மாற்று உரமாக வழங்கும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உர உரிமம் ரத்து செய்யப்படும், என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT