Published : 31 Oct 2021 03:11 AM
Last Updated : 31 Oct 2021 03:11 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய பெய்த கனமழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கண்மாய்களுக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் லேசான மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
அதிகபட்சமாக வைகுண்டம் பகுதியில் 184 மிமீ மழை பதிவானது. ஓட்டப்பிடாரத்தில் 127, தூத்துக்குடியில் 91.6, காயல்பட்டினத்தில் 85, கடம்பூரில் 76, கயத்தாறு மற்றும் மணியாச்சியில் 75 மிமீ என, மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 1,092 மிமீ மழை பதிவாகியது.
மரம் சாய்ந்து விழுந்தது
பலத்தமழை காரணமாக தூத்துக்குடியில் தற்காலிகமாக செயல்படும் பழைய பேருந்து நிலையம், தமிழ் சாலை, வஉசி சாலை, பிரையன்ட்நகர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், திருச்செந்தூர் சாலை உள்ளிட்ட மாநகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கரோனா பரிசோதனைக் கூடம் அருகே இருந்த சுமார் 50 ஆண்டுகால பழமையான மரம் நேற்று அதிகாலை 2 மணியளவில் சாய்ந்து விழுந்தது. கரோனா பரிசோதனைக் கூடம் சேதமடைந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள உப்பளங்களில் மழைநீர் தேங்கி குளம் போன்று காட்சியளித்தது.
மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் சாலைகளில் ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளம் காரணமாக மழைநீர் சாலையை சூழ்ந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
இருப்பு பாதையை சூழ்ந்த மழைநீர்
பலத்த மழை காரணமாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழைநீர் தேங்கி இருப்பு பாதைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. மேலும், ரயில் நிலைய கணினி அறை, ரயில்வே காவல் நிலைய அறை மற்றும் ரயில் நிலைய வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியதால், பயணிகள் ரயில் நிலையத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த முத்துநகர் விரைவு ரயில் மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.
மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கான பணிகள் 50 மோட்டார்களை கொண்டு நடைபெற்று வருகிறது. மேலும், 200 மோட்டார்கள் தயாராக உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாலையோரங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி செல்வநாயகபுரம், டிஎஸ்எப் கார்னர், லூர்தம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாரு, ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா ஆகியோர் உடனிருந்தனர்.
நிரம்பும் நீர்நிலைகள்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பகுதியில் 90 சதவீதம் மானாவாரி நிலங்கள் உள்ளன. வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் உள்ள கண்மாய்கள், ஊருணிகள் மழைக்காலங்களில் நிரம்பி, விவசாயத்துக்கு கைகொடுத்து வருகின்றன. நேற்று முன்தினம் பெய்த மழையில் நீர்நிலைகள் ஓரளவு நிரம்பி உள்ளன. தொடர்ந்து, நேற்று காலையிலும் சில இடங்களில் தூறல் பெய்தது. ஓட்டப்பிடாரம் பகுதியில் மழை அதிகமாக இருந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT