Published : 23 Oct 2021 03:09 AM
Last Updated : 23 Oct 2021 03:09 AM
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குறைகளை ஆய்வு செய்து, சட்டப்பேரவையில் அறிக்கை சமர்ப்பிப்போம் என சட்டப்பேரவை பொது கணக்குக் குழுத்தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
மத்திய கணக்காயர் குழு அளித்த அறிக்கையின்படி, தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை பொது கணக்குக் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஆய்வு செய்தது. இதில், குழுவின் தலைவர் கு.செல்வபெருந்தகை, குழு உறுப்பினர்கள் சரஸ்வதி, பூண்டி கே.கலைவாணன், சிந்தனைச்செல்வன், சி.சுதர்சனம், தி.வேல்முருகன், எம்.எச்.ஜவாஹிருல்லா, கே.மாரிமுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசன் ஆகியோர், ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் முன்னிலையில் அம்மையப்பன், கொரடாச்சேரி போன்ற பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், பொது கணக்குக் குழுத் தலைவர் கு.செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியது:
திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் அரசுக் கல்லூரி 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் குடவாசல் கல்லூரிக்கு பல்வேறு பணிகளை செய்திருக்கலாம். அவ்வாறு செய்யாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, பொதுப்பணித் துறை, கல்வித் துறை, அறநிலையத் துறையினரை வரவழைத்து, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சியில் அதிகளவிலான குறைகள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் வரைவு திட்டம், அனுமதி போன்றவை சரியாக கையாளப்படாததால், பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதை மத்திய கணக்காயர் குழு கண்டறிந்து தந்துள்ளது. அதன் அடிப்படையில் ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வு முடிந்தபின்னர், சட்டப்பேரவையில் அறிக்கையை சமர்ப்பிப்போம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT