Published : 23 Oct 2021 03:09 AM
Last Updated : 23 Oct 2021 03:09 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிக்கான மறைமுக தேர்தலில் - 19 ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றியது திமுக :

வேலூர் மாவட்ட ஊராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மு.பாபுவுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அடுத்த படம்: ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக வெற்றிபெற்ற ஜெயந்தி திருமூர்த்திக்கு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன். கடைசிப்படம்: திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமயந்திக்கு, துணை சபாநாயகர் பிச்சாண்டி வாழ்த்து தெரிவித்தார். அருகில், எம்பி அண்ணாதுரை, எம்எல்ஏ சரவணன், ஆணையாளர் விஜயலட்சுமி உள்ளிட்டோர்.

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தில் உள்ள 3 மாவட்ட ஊராட்சி குழு மற்றும் 19 ஊராட்சி ஒன்றியங் களுக்கான மறைமுக தேர்தலில் குடியாத்தம் மற்றும் சோளிங்கர் ஒன்றியங்களைத் தவிர மற்ற பதவிகளுக்கு திமுகவினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்ட ஊராட்சி குழு மற்றும் 7 ஊராட்சி ஒன்றியங்கள், ராணிப்பேட்டையில் மாவட்ட ஊராட்சி குழு மற்றும் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நேற்று நடைபெற்றது. நெமிலி ஒன்றியத்தில் மட்டும் மறைமுக தேர்தல் வரும் 30-ம் தேதிக்குள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளர் மு.பாபு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, மாவட்ட குழு துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிருஷ்ணவேணி போட்டியின்றி தேர்வானார்.

வேலூர் ஒன்றியக்குழு தலைவராக திமுகவின் அமுதா ஞானசேகரன் போட்டியின்றி தேர்வானார். துணைத்தலைவர் பதவிக்கு ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மகேஸ்வரி வெற்றிபெற்றார். கணியம்பாடி ஒன்றிய குழு தலைவராக திமுகவின் திவ்யா, துணை தலைவராக திமுகவின் கஜேந்திரன், அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவராக திமுக வேட்பாளர் பாஸ்கரன், துணை தலைவராக திமுக வேட்பாளர் சித்ரா குமாரபாண்டியன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.

கே.வி.குப்பம் ஒன்றிய குழு தலைவராக திமுகவின் ரவிச்சந்திரன், துணை தலைவராக திமுகவின் பாரதி வெங்கடேசன், பேரணாம்பட்டு ஒன்றிய குழுதலைவராக திமுகவின் சித்ரா ஜனார்த்தனன், துணை தலைவராக திமுகவின் லலிதா டேவிட், காட்பாடி ஒன்றியக் குழு தலைவராக திமுகவின் வேல்முருகன், துணை தலைவராக திமுகவின் சரவணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.

குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு திமுக கவுன்சிலர்கள் சத்தியானந்தன், ரஞ்சித் ஆகியோர் இடையில் போட்டி ஏற்பட்டது. அங்கு கவுன்சிலர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. வாக்களிப்பு முடிவில் சத்தியானந்தன் 16 வாக்குகள் வெற்றிபெற்றார். துணைத் தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளர் அருண் முரளி போட்டியின்றி தேர்வானார்.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக திமுகவின் ஜெயந்தி திருமூர்த்தியும், துணைத் தலைவராக நாகராஜூ ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர். இருவருக்கும், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அரக்கோணம் ஒன்றிய குழு தலைவராக திமுகவின் நிர்மலாவும், துணைத்தலைவராக புருஷோத்தமன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர். ஆற்காடு ஒன்றிய குழு தலைவராக திமுகவின் புவனேஸ்வரி, துணைத் தலைவராக மதி நந்தகுமார், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு திமுகவின் அனிதா, துணைத் தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளர் முனியம்மாள், திமிரி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு திமுவின் அசோக், துணைத் தலைவர் பதவிக்கு திமுகவின் ரமேஷ், வாலாஜா ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு திமுகவின் வெங்கட்ரமணன், துணைத் தலைவர் பதவிக்கு திமுகவின் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.

சோளிங்கர் ஒன்றியத்தில் திமுகவின் கலைகுமார் 12 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதேபோல், துணைத் தலைவர் பதவிக்கு திமுகவின் பூங்கொடி ஆனந்தன் 5 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவிக்காக மறைமுக தேர்தல் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா முன்னிலையில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவிக்கு திமுகவின் முன்னாள் எம்எல்ஏ சூர்யகுமார் 7 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இதைத்தொடர்ந்து, துணைத் தலைவருக்கான தேர்தலில் திமுகவின் பிரியதர்ஷினி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருப்பத்தூர் ஒன்றியத்தில் திமுகவின் விஜயா ஒன்றியக்குழுத்தலைவராகவும், திமுகவின் ஞானசேகரன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டனர்.

ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் திமுகவின் சத்தியா ஒன்றியக் குழுத்தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திமுகவின் தேவி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

கந்திலி ஒன்றியத்தில் திமுக வின் திருமதி ஒன்றியக்குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் பதவிக்கு திமுக வின் மோகன்குமார் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றார்.

ஆலங்காயம் ஒன்றியத்தில் திமுகவின் சங்கீதா ஒன்றியக்குழுத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். திமுகவின் பூபாலன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

நாட்றாம்பள்ளியில் ஒன்றியக் குழு தலைவராக திமுகவின் வெண்மதியும்,துணைத் தலைவராக தேவராஜூம் தேர்வு செய்யப்பட்டார்.

மாதனூர் ஒன்றியத்தில் திமுகவின் சுரேஷ்குமார் ஒன்றியக் குழுத் தலைவராகவும், திமுகவின் சாந்தி துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட செய்யாறு ஒன்றிய குழு தலைவராக என்.வி.பாபுவும், தண்டராம்பட்டு ஒன்றிய குழு தலைவராக பரிமளா கலையரசன், துரிஞ்சாபுரம் ஒன்றிய குழு தலைவராக தமயந்தி ஏழுமலை ஆகியோர் வெற்றி பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x