Published : 22 Oct 2021 03:07 AM
Last Updated : 22 Oct 2021 03:07 AM
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் பயன்படுத்தப்பட்டது சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது என சட்டப்பேரவை பொது கணக்குக் குழுத் தலைவர் கு.செல்வபெருந்தகை தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் பொது கணக்குக் குழு அமைப்பின் தலைவர் கு.செல்வபெருந்தகை, உறுப்பினர்கள் பூண்டி கே.கலைவாணன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, சிந்தனைச் செல்வன் ஆகியோர், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், அரசு கூர்நோக்கு இல்லம், புதிய பேருந்து நிலையம் உட்பட மாவட்டத்தில் 14 இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நேற்று ஆய்வு செய்தனர்.
பின்னர், புதிய பேருந்து நிலையத்தில் செய்தியாளர்களிடம் கு.செல்வபெருந்தகை கூறியதாவது: கடந்த ஆட்சியில் நிகழ்ந்த தவறுகள், நிர்வாக திறமையின்மை, அரசு பண விரயம் என பல தலைப்புகளில் சிஏஜி (பொது தணிக்கைக் குழு) ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதன் அடிப்படையில், எந்தெந்த தவறுகள் களையப்பட வேண்டும்? வருங்காலங்களில் தவறுகள் நிகழாமல் இருப்பது எப்படி? தவறுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்பன குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்கள் உட்பட பெரும்பாலான அரசுக் கட்டிடங்கள் தரமானவையாக இல்லை. ஒரு பள்ளியில் ஆய்வு செய்தபோது முறையான கழிப்பறை, தண்ணீர் வசதி இல்லை. விஷ ஜந்துக்கள் நடமாடும் வகையில் புதர்மண்டிக் கிடக்கிறது.
மேலும், கடந்த ஆட்சியில் மருத்துவத் துறையில் காலாவதியான மருந்துகள் பயன்படுத்தப் பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைகளில், ரூ.26.17 லட்சம் மதிப்பிலான காலாவதி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக, 2013-14-ம் ஆண்டுகளில் இந்த தவறு நிகழ்ந்துள்ளது. இந்த மருந்துகளைப் பயன்படுத்தியவர்களுக்கு உயிரிழப்பு உள்ளிட்ட ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதா என்பது கண்டறியப்படும். தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளையும், குற்றச் செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளையும் ஒரே வளாகத்துக்குள் வைத்துள்ளனர். சிறையில் உள்ள சிறார்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைத்து வைத்திருக்கக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், கூர்நோக்கு இல்லத்தில் ஒரு மணிநேரம் மட்டுமே வெளியில் அனுமதித்துவிட்டு, மீதிநேரம் அடைத்து வைத்துள்ளது தெரியந்தது. இதையடுத்து, சிறார்களை சுதந்திரமாக வெளியேவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின்போது, அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT