Published : 09 Oct 2021 03:13 AM
Last Updated : 09 Oct 2021 03:13 AM

புதுக்கோட்டை மேம்பால பணிகள் தாமதம் : பழுதான சர்வீஸ் சாலைகளால் கடும் அவதி :

தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் இருப்பதால் தடுமாறிச் செல்லும் வாகனங்கள். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

கன்னியாகுமரி- காஷ்மீர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47.250 கி.மீ.தொலைவுக்கு ரூ.349.50 கோடியில்நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டு, கடந்த 2013-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த சாலையில் புதுக்கோட்டை பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று புதுக்கோட்டை பகுதியில் ரூ.29 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கியது. ஓராண்டு காலத்தில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வரும் கரோனா தொற்று பரவல் காரணமாக மேம்பால பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சாலையில் மேம்பால பணிகள்நடைபெறுவதால், வாகன போக்குவரத்து தடையின்றி நடைபெற பாலத்தின் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்த சர்வீஸ் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. குறிப்பாக திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடத்தில் இருக்கும் சர்வீஸ் சாலையின் நிலை மிக மோசம். இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் இந்த சாலை பகுதியில் கீழே விழும் நிகழ்வு அடிக்கடி நடக்கிறது. மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் இந்த சர்வீஸ் சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும். மேம்பால பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீரமைக்க நடவடிக்கை

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் பி.சங்கர் கூறும்போது, “புதுக்கோட்டை மேம்பால சர்வீஸ்சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் விரைவாக புதியசாலைகள் அமைக்க ஒப்பந்தக்காரரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை முழுவதும் ஆங்காங்கே காணப்படும் குழிகள், பள்ளங்களை இன்னும்ஒரு வாரத்தில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மேம்பால பணிகள்தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. விரைவாக பணிகளைமுடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x