Published : 07 Oct 2021 03:15 AM
Last Updated : 07 Oct 2021 03:15 AM

குமரி மாவட்டத்தில் நீடிக்கும் மழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு :

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீருடன் மழைநீரும் கலந்து திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில்/ திருநெல்வேலி/ தென்காசி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக சுருளகோட்டில் 72 மிமீ மழை பெய்தது. பெருஞ்சாணியில் 71 மிமீ, களியலில் 54, பேச்சிப்பாறையில் 65, புத்தன்அணையில் 68, சிவலோகத்தில் 57, சிற்றாறு ஒன்றில் 45, களியலில் 54, கன்னிமாரில் 46, மயிலாடியில் 24, பாலமோரில் 47, ஆரல்வாய்மொழியில் 57, முள்ளங்கினாவிளையில் 32, முக்கடல் அணையில் 27, கோழிப்போர்விளை, குருந்தன்கோட்டில் தலா 15 மிமீ மழை பதிவானது.

கனமழையால் மாவட்டத்தில் உள்ள அணைகள் ஏற்கெனவே நிரம்பிய நிலையில், அணைப் பகுதிகளை பொதுப்பணித்துறை நீர்ஆதார பிரிவு பொறியாளர் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 45 அடியாக உள்ள நிலையில், அணைக்கு விநாடிக்கு 3,400 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69 அடியாக உள்ள நிலையில், 1,500 கனஅடி தண்ணீர் வந்தது. சிற்றாறு ஒன்றின் நீர்மட்டம் 16.66 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 1,200 கனஅடி தண்ணீர் வருகிறது. 3 அணைகளிலும் விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வருகிறது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து 3,100 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சிற்றாறு ஒன்றில் 1,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சிற்றாறு இரண்டு அணையில் இருந்து 336 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. கோதையாற்றில் தண்ணீர் கரைபுரள்கிறது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தரைப்பாலம் மூழ்கியது. மழைநீருடன் 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும் பிறபகுதிகளிலும் மழை நீடிக்கிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சேர்வலாறில் 74 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பிறஇடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 29, மணிமுத்தாறு- 38.4, நம்பியாறு- 40, கொடுமுடியாறு- 45, அம்பாசமுத்திரம்- 8 , சேரன்மகாதேவி- 65.4, ராதாபுரம்- 40 , நாங்குநேரி- 17, களக்காடு- 17.4, பாளையங்கோட்டை- 4, திருநெல்வேலி- 5 .

அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்):

பாபநாசம்- 88 அடி (143 அடி), சேர்வலாறு- 101.31 அடி (156 அடி ), மணிமுத்தாறு- 65 (118), வடக்கு பச்சையாறு- 16.65 (50), நம்பியாறு- 10.25 (22.96), கொடுமுடியாறு- 17.50 (52.25).

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சுரண்டை, பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் ராமநதி அணையில் 3 மி.மீ., குண்டாறு அணையில் 2 மி.மீ., சிவகிரியில் 1 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணை நீர்மட்டம் 62.30 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 56 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 52.50 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 125.50 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x