Published : 06 Oct 2021 03:14 AM
Last Updated : 06 Oct 2021 03:14 AM

வான்தீவில் வன உயிரின வார விழிப்புணர்வு நிகழ்ச்சி - கடலுக்கடியில் உயிரினங்களை நேரடியாகப் பார்த்து மாணவர்கள் உற்சாகம் :

தூத்துக்குடி வான் தீவு பகுதியில் கடலுக்கு அடியில் நிலவும் கடல்சார் உயிரினங்களின் சூழல் அமைப்பு குறித்து கண்ணாடி மூலம் பார்வையிடும் கல்லூரி மாணவர்கள். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

வன உயிரின வார விழாவை முன்னிட்டு, மன்னார் வளைகுடா கடல்வாழ் தேசிய பூங்கா வனத்துறை மற்றும் தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி மையம் சார்பில், கடல்சார் உயிரினங்களின் சூழல் அமைப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தூத்துக்குடி அருகே வான் தீவில் நேற்று நடைபெற்றது.

சென்னை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஆகாஷ் தீப் பரூவா, நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து பேசும்போது, ``வனத்துறை முதல்முறையாக இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை மன்னார் வளைகுடாவில் நடத்துகிறது. கடல்வாழ் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் வேண்டியதன் அவசியத்தை மாணவர்கள் அறிந்துகொண்டு, இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கடல் வளத்தைபாதுகாக்க மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்திலேயே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார் அவர்.

தூத்துக்குடி மாவட்ட வன அலுவலரும், மன்னார் வளைகுடா தேசிய பூங்கா வனஉயிரினக் காப்பாளருமான அபிஷேக் டோமர் தலைமை வகித்தார். களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய வனப்பாதுகாவலர் செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் தி.சாரு, சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி மைய இயக்குநர் ஜே.கே.பேட்டர்சன் எட்வர்டு, வனச்சரக அலுவலர் ரா.ரகுவரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்களுக்கு ஸ்கூபா டைவிங் தொழில் நுட்பம் குறித்து, சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி மைய நிபுணர்கள் பயிற்சி அளித்தனர். தொடர்ந்து மாணவர்கள் கண்ணாடி மூலம் கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறைகள், கடல் அட்டை, கடல் புற்கள், கடல் தாமரை, வண்ண மீன்கள், கடல் பாசி, நட்சத்திர மீன்கள், சங்கு வகைகள் மற்றும் பல்வேறு வகையான உயிரினங்களைப் பார்வையிட்டனர். கடல் வாழ் உயிரினங்களை நேரடியாக பார்வையிட்ட மாணவர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். தொடர்ந்து வான் தீவு பகுதியை மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் சுத்தம் செய்தனர். தீவு பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை சேகரித்து கரைக்கு கொண்டு வந்தனர்.

ஏற்பாடுகளை, வனச்சரக அலுவலர் ரா.ரகுவரன் தலைமையில், வனவர்கள் அருண்குமார், மதனகுமார், ராஜ்குமார், அஸ்வின், வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x