Published : 05 Oct 2021 03:14 AM
Last Updated : 05 Oct 2021 03:14 AM
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1,861 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் சுதந்திரமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், அரக்கோணம் ஒன்றியத்துக்கு கலால் உதவி ஆணையர் சத்தியபிரசாத் (99413-32021), ஆற்காடு ஒன்றியத்துக்கு புள்ளியல் துறை உதவி இயக்குநர் தர் (90430-73186), காவேரிப்பாக்கம் ஒன்றியத்துக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கணக்கு அலுவலர் சசிகலா (89034-56342), நெமிலி ஒன்றியத்துக்கு துணை ஆட்சியர் வள்ளி (94434-72844), சோளிங்கர் ஒன்றியத்துக்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) சண்முகசுந்தரம் (89035-00425), திமிரி ஒன்றியத்துக்கு ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி (94450-00416), வாலாஜா ஒன்றியத்துக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இளவரசி (99653-13372) ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மாவட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள வாக்குச்சாவடிகளின் உள்ளே யும் வெளியேயும் 2,296 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவுள்ளனர். இதில், அரக்கோணத்தில் ஒன்றியத்தில் 396, ஆற்காடு ஒன்றியத்தில் 270, காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 212, நெமிலி ஒன்றியத்தில் 360, சோளிங்கர் ஒன்றியத்தில் 284, திமிரி ஒன்றியத்தில் 356, வாலாஜா ஒன்றியத்தில் 418 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள வாலாஜா, திமிரி, ஆற்காடு ஆகிய 3 ஒன்றியங்களில் 6 மாவட்ட கவுன்சிலர், 56 ஒன்றிய கவுன்சிலர், 123 கிராம ஊராட்சி தலைவர், 816 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 653 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், முதற்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இருந்து 7 கிராம ஊராட்சி தலைவர்கள், 171 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பதற்றமான 196 வாக்குச்சாவடிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதற்கட்ட தேர்தல் பணியில் 5,293 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.
முதற் கட்ட தேர்தலில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 722 பேரும், இரண்டாம் கட்ட தேர்தலில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 515 பேரும் வாக்காளிக்க உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார் நிலையில் இருப்பதால் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும். மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 1,861 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT