Published : 03 Oct 2021 03:13 AM
Last Updated : 03 Oct 2021 03:13 AM
வந்தவாசி அடுத்த புன்னை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் இளைஞர்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி பிறந்தநாளை யொட்டி, தி.மலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளில் நேற்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டங்களில், அடிப்படை தேவைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கிராம மக்கள் எடுத்துரைத்தனர். மேலும், ஒரு சில ஊராட்சிகளில், நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றாமல் உள்ளதை கண்டித்து நூதனப் போராட்டம், புறக்கணிப்பு மற்றும் சாலை மறியலில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
வந்தவாசி அடுத்த புன்னை ஊராட்சியில் பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் இளைஞர்கள், தங்களது எதிர்ப்பை நூதன முறையில் வெளிப்படுத்தினர். அப்போது அவர்கள், கண்களில் கருப்பு துணியால் முடிக் கொண்டும், வாய் மற்றும் காதுகளை பொத்திக் கொண்டும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதையடுத்து அவர்களது கோரிக் கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இதேபோல், வந்தவாசி அடுத்த கீழ்வெள்ளியூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மயானப் பாதை அமைத்துக் கொடுக்காததைக் கண்டித்து பட்டியலின மக்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் கிராமத்தில் நடை பெற்ற கிராம சபைக் கூட்டத்தில், கொளத்தூர் ஏரியில் இருந்து வண்ணாங்குளம் ஏரிக்கு வரும் நீர்வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், கால்வாயை சீரமைத்தும் தண்ணீரை கொண்டு வருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ஜவ்வாதுமலையில் உள்ள ஊர் கவுண்டனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர். ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணியில் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், அதற்கு காரண மான தலைவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை அடுத்த ஆடையூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாசலத்திடம் தங்கள் கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், கழிவுநீர் கலந்த குடிநீர் வருவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும் அவர்கள், புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இதேபோல், பல ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம் மற்றும் சலசலப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT