Published : 30 Sep 2021 07:46 AM
Last Updated : 30 Sep 2021 07:46 AM
“திருநெல்வேலி மாவட்டத்தில் 333 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன” என,ஆட்சியர் வே.விஷ்ணு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சியில் 12 உறுப்பினர் பதவி, 122 ஊராட்சி ஒன்றியஉறுப்பினர் பதவி, 204 ஊராட்சி தலைவர் பதவி, 1,731 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 623 வாக்குப்பதிவு மையங்களிலும், 2-ம்கட்டமாக 565 வாக்குப்பதிவு மையங்களிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த மையங்களில் தேர்தல்அலுவலர்களாக 9,567 பேர் பணிபுரிய உள்ளனர். இவர்களுக்கான 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் அந்தந்த ஒன்றியங்களில் நேற்றுநடைபெற்றது. பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தேர்தல்அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பை திருநெல்வேலி மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஜெ. ஜெயகாந்தன், மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 2,069 பதவியிடங்களுக்கு நேரடி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் 5,522 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளார்கள். 12 மாவட்ட ஊராட்சி வார்டுஉறுப்பினர் தேர்தலுக்கு 59 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 122 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் 626 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 204 கிராமஊராட்சி தலைவர் பதவியிடங்களில் 6 கிராம ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 198 பதவியிடங்களுக்கு 924 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 1,731 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 378 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 1,353 பதவியிடங்களுக்கு 3,913 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வரும் 6-ம் தேதி முதல்கட்டமாக அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை மற்றும் பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வரும் 9-ம் தேதி 2-ம் கட்டமாக களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 333 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் போதுமான காவல்துறை பாதுகாப்பு, வீடியோபதிவுகள் மற்றும் நுண் தேர்தல்மேற்பார்வையாளர்கள், இணையதள கண்காணிப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றார்.
தென்காசி
தேர்தலில் மொத்தம் 10,678 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு கடந்த 24-ம் தேதி முதல்கட்ட பயிற்சிவகுப்பு நடைபெற்றது. நேற்று இரண்டாம்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஒன்றியத்துக்கு ஓர் இடம் என மொத்தம் 10 மையங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் வாக்குப்பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர். கடையம், கீழப்பாவூர் ஒன்றியங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை தேர்தல் பார்வையாளர் பொ.சங்கர் ஆய்வு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT