Published : 23 Sep 2021 03:13 AM
Last Updated : 23 Sep 2021 03:13 AM
வரும் 26-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்தில் நடைபெறும் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாள் நிகழ்ச்சியில் குடும்பத்தினர் தவிர பொதுமக்கள்பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்றைய தினம் மாவட்டத்தில் 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து எஸ்பி பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு தளர்வுகளுடன் கூடிய 144 தடை உத்தரவு 31.10.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு அமலில் உள்ளது. எனவே, செப்டம்பர் 26-ம் தேதி நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 18-ம் ஆண்டு நினைவு நாளைமுன்னிட்டு பொதுமக்கள் வாகன ஊர்வலம் மற்றும் எவ்வித ஊர்வலமும் நடத்த அனுமதி கிடையாது.
பால்குடம் எடுத்துச் செல்லவோ, அன்னதானத்துக்கோ, பேனர்கள் வைக்கவோ, சாதி ரீதியாக சட்டை அணியவோ, பிற சாதியினர் புண்படும்படி வாசகங்களை பயன்படுத்தி கோஷம் எழுப்பவோ கூடாது. அம்மன்புரத்தில் வெங்கடேஷ் பண்ணையார் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அவரது நினைவிடத்துக்கு செல்வதற்கு அனுமதி கிடையாது.
வெளி மாவட்டங்களிலிருந்து யாரும் வருவதற்கு அனுமதியில்லை. அதற்காக, 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 10 காவல் துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார் எஸ்பி.
கூட்டத்துக்கு திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் முன்னிலை வகித்தார். ஊர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், ஆத்தூர் காவல் ஆய்வாளர் ஐயப்பன், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில், உதவி ஆய்வாளர்கள் சதீஷ், நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT