Published : 22 Sep 2021 03:07 AM
Last Updated : 22 Sep 2021 03:07 AM
சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவரைக் காப்பாற்றிய போலீஸார் பாராட்டப்பட்டனர்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே 18-ம் தேதி மாலை 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலைவிபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். சுற்றி நின்று கொண்டிருந்த சுமார் 60 பேரில், அவரைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. இந்நேரத்தில் அந்த வழியாக வந்த மாவட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர்கள் சக்தி மாரிமுத்து, டேவிட் ராஜன், சண்முகையா, சுடலைமணி, மகேஷ் ஆகியோர், தாங்கள் வந்த காவல் துறை வாகனத்திலேயே அவரை ஏற்றி, மருத்துவமனை கொண்டு சென்று, அவரது உயிரைக் காப்பாற்றினர்.
இதையறிந்த எஸ்பி ஜெயக்குமார் போலீஸார் 6 பேருக்கும்பரிசு வழங்கி, பாராட்டினார்.இதுபோன்று பாதிக்கப்படுபவர்களுக்கு காவல்துறை மட்டுமல்ல பொதுமக்களும் உதவுவதற்காகவே அரசு 2014-ம் ஆண்டு 'குட் சமாரிட்டன் சட்டம்' (Good Samaritan Law) என்ற சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி இதுபோன்று பாதிக்கப்பட்டு உயிருக்குஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருப்பவர்களை பொதுமக்கள் மனிதாபிமானத்தோடு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதிக்கலாம்.
உதவுபவர்கள் பெயர் மற்றும்முகவரி போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை. அதே போன்று காவல்துறைக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. பொதுமக்களில் பலர் இதுபோன்று பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பார்கள். ஆனால், காவல்துறையால் தங்களுக்கு பிரச்சினை ஏதும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உதவ யாரும் முன்வருவதில்லை.
உதவி செய்ய முடியாவிட்டாலும் 108 அல்லது காவல்துறையின் இலவச அவசர உதவி எண் 100-க்கு பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். பொது மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, அவர்களது உயிரைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என எஸ்பி ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT