Published : 22 Sep 2021 03:07 AM
Last Updated : 22 Sep 2021 03:07 AM
இந்தியாவில் கர்நாடகா மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினத்தில் தான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இத்திருவிழா அக்டோபர் 6-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 15-ம் தேதி சூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறுகிறது. கரோனா பொது முடக்கம் அமலில்இருந்ததால் கடந்த ஆண்டு கொடியேற்றம் மற்றும் சூரசம்ஹாரம் நிகழ்வுகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியளிக்கப்படவில்லை. மற்ற விழா நாட்களில் கரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு கரோனா தாக்கம்குறைவாக இருப்பதால் பக்தர்களை அனைத்து விழா நாட்களிலும் முழுமையாக அனுமதிக்க வேண்டும். தசரா விழாவை சிறப்பாக கொண்டாட மாவட்ட நிர்வாகம் முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக மற்றும் பல்வேறு தசரா குழுக்கள் சார்பில் குலசேகரன்பட்டினத்தில் செப்டம்பர் 21-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று காலை பாஜகவினர் மற்றும் தசரா குழுவினர் திரண்டனர். அவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் திட்டமிட்டபடி உண்ணாவிரதத்தை தொடங்கினர்.
இதையடுத்து, அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக நாகர்கோவில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் இரா.சிவமுருகன் ஆதித்தன், பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவன், மாவட்ட மகளிரணித் தலைவர் தேன்மொழி உள்ளிட்ட 97 பேரை போலீஸார் கைது செய்து, அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT