Published : 21 Sep 2021 03:21 AM
Last Updated : 21 Sep 2021 03:21 AM

திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் - மழைநீர் வடிகால் தூய்மை பணி தொடங்கியது : ஆட்சியர்கள் நேரில் ஆய்வு

தி.மலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள மழைநீர் வடிகால்வாய் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அடுத்த படம்: ராணிப்பேட்டையில் மழைநீர் வடிகால்வாய் தூர் வாரும் பணியை தொடங்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன். கடைசிப்படம்: திருப்பத்தூர் பெரியார் நகரில் கழிவுநீர் கால்வாய் தூய்மை பணியை நேற்று ஆய்வு செய்த ஆட்சியர் அமர்குஷ்வாஹா.

திருவண்ணாமலை/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்

திருவண்ணாமலை, ராணிப் பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ‘மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம்’ நேற்று தொடங்கியது. இதனை, ஆட்சியர்கள் பா.முரு கேஷ், பாஸ்கர பாண்டியன், அமர் குஷ்வாஹா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

தி.மலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்யும்போது வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதி களில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக வடிகால் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகள், வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பெரிய மழைநீர் வடிகால், நடுத்தர மழைநீர் வடிகால் மற்றும் சிறிய மழைநீர் வடிகால் என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடை பெறுகின்றன.

பெரிய கால்வாய்களை பொக் லைன் இயந்திரம் மூலமும், சிறிய கால்வாய்களை தொழிலாளர்கள் மூலம் தூர்வாரப்படுகிறது. 100 மீட்டர் இடைவெளியில் கம்பி வலை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திடக் கழிவு, கட்டிடக் கழிவு மற்றும் செடி, கொடி ஆகியவற்றை முழுமையாக அகற்றும் பணியும் நடைபெறுகிறது. திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சி, திருவண்ணாமலை நகரம் அவலூர்பேட்டை சாலை, சின்னக்கடை தெரு, மத்திய பேருந்து நிலையம், பழைய பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற வடிகால் தூய்மைப் பணியை ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார்.

தலையீடு இருக்கக் கூடாது

அப்போது அவர் பேசும்போது, “ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களை 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப் படுத்திருக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் தொடர்பாக, தன்னை சந்தித்த ஊராட்சி மன்ற தலைவர்களிடம் பேசும்போது, “மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. நீரோடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, ஊராட்சி மன்ற தலைவர் களின் தலையீடு இருக்கக் கூடாது. பணிகளை தடுத்து நிறுத்த முயன்றால் காவல் நிலையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” என ஆட்சியர் பா.முருகேஷ் எச்சரித்தார். அப்போது, கூடுதல் ஆட்சியர் பிரதாப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் ராணிப் பேட்டை மாவட்டத்தில் மழைநீர் கால்வாய்களை தூர் வரும் பணியை முடிக்க மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டத்தில் கால்வாய் தூர் வாரும் பணியை ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை நகராட்சியில் 9 கி.மீ தொலைவுக்கு பொதுப் பணித்துறை கால்வாய்கள், 46 கி.மீ தொலைவுக்கு நகராட்சி கழிவுநீர் கால்வாய்கள் உள்ளன. இதனை சுத்தம் செய்யும் பணியில் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்துவதுடன் 165 சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்.

ஆற்காட்டில் முப்பதுவெட்டி மழைநீர் கால்வாய் தூர் வாரும் பணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார். நகராட்சியில் உள்ள 3.5 கி.மீ தொலைவுக்கு பொதுப்பணித்துறை ஆற்றுக் கால்வாய், 37.5 கி.மீ தொலைவுக்கு கழிவுநீர் கால்வாய் தூர் வாரும் பணி தொடங்கி ஒரு வாரத்தில் முடிக்கப்படவுள்ளது. இதேபோல், அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளிலும் இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்படவுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டம்

வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி கால்வாய்களை தூர்வாரும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் 2 கி.மீ., தொலைவுக்கு மழைநீர் வரத்துக் கால்வாய்களை தூய்மை செய்யும் பணிகளை ஆட்சியர் அமர் குஷ்வாஹா முதலில் ஆய்வு செய்தார். அப்போது, திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள மழைநீர் வரத்துக்கால்வாய்களை விரைவில் சரி செய்ய வேண்டும். கால் வாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து, கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையாளர் ஏகராஜூக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, வாணியம்பாடி உதயேந்திரம் பேரூராட்சி பகுதிகளில் 17 கி.மீ., தொலைவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய்கள் தூய்மை செய்யும் பணிகளையும், வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் 36 கி.மீ., தொலைவுள்ள கழிவுநீர் கால்வாய் மற்றும் ஆம்பூர் பன்னீர்செல்வம் நகரில் 35 கி.மீ., தொலைவுள்ள கழிவுநீர் கால்வாய்களை தூய்மை செய்யும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் அமர்குஷ்வாஹா தூய்மைப்பணிகளை திட்டமிடப்பட்டுள்ள நாட்களுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அந்தந்த நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அப்போது நகராட்சி ஆணை யாளர்கள் சத்தியநாதன் (வாணியம்பாடி), ராஜேந்திரன் (ஆம்பூர்), பேரூராட்சி செயல் அலுவலர் சேகர், நகராட்சி பொறி யாளர்கள் சங்கர், உமாமேஸ்வரி உட்பட பலர் உடனிருந்தனர்.

நெடுஞ்சாலை துறை சார்பில் தூய்மை பணி

நெடுஞ்சாலைத் துறை சார்பில் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. கோட்டப் பொறியாளர் முரளி தலைமையில் திருவண்ணாமலை – கள்ளக்குறிச்சி சாலையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நீர் வரத்துக் கால்வாய்கள் தூர் வாரும் பணி நடைபெற்றது. சிறுபாலங்களின் வழியாக தடையின்றி மழைநீர் வெளியேறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், செங்கம் உதவி கோட்டப் பொறியாளர் நாராயணன் மேற்பார்வையில் புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலையிலும், போளுர் உதவி கோட்டப் பொறியாளர் கோவிந்தசாமி மேற்பார்வையில் போளூர் - செங்கம் சாலையில் உள்ள கடலாடி கிராமத்திலும், ஆரணி - எட்டிவாடி சாலையிலும், தண்டராம்பட்டு உதவி கோட்டப் பொறியாளர் கே.தியாகு மேற்பார்வையில் ராதாபுரம்- வாணாபுரம் சாலையில் உள்ள காம்பட்டு கிராமத்தில் பணிகள் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x