Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 4 நாட்களில் 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 34 பேர், கரோனா பாதிப்பு, கொலை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளனர்; 4 பேர், பல்வேறு காரணங்களால் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதனால், மீஞ்சூர், பூந்தமல்லி, ஆர்.கே.பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஆலாடு, திருவெள்ளவாயல், கொசவன்பாளையம், தாமனேரி ஆகிய 4 ஊராட்சி தலைவர் பதவிகள், பூண்டி, சோழவரம், திருவாலங்காடு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 4 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூர், திருத்தணி உள்ளிட்ட 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 27 ஊராட்சிகளின் 30 வார்டு உறுப்பினர் பதவிகள் என 38 காலியாக உள்ள பதவிகளுக்கு வரும்அக்டோபர் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல்கடந்த 15-ம் தேதி தொடங்கியது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் இன்னும் அறிவிக்காததால், அப்பதவிகளுக்கு போட்டியிட யாரும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
அதே நேரத்தில் ஊராட்சித் தலைவர் பதவிகள், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட கடந்த 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையான 4 நாட்களில் 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், இந்த தேர்தலில் தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது தெரிவிக்கப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள, ‘மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், உள்ளாட்சித் தேர்தல் பிரிவு, முதல் தளம், திருவள்ளூர் (தொலைபேசி எண். 044 - 27662501) என்ற முகவரியில் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT