Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM
2020 -21-ம் ஆண்டில் தமிழகத்தில் உயிரிழந்தவர்களிடமிருந்து பெறப்படும் சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சையில் மிகச் சிறந்த செயல்பாட்டுக்காக உறுப்புமாற்று சிகிச்சை அதிகார அமைப்பு (டிரான்ஸ்டன்) திருச்சி தென்னூரில் உள்ள காவேரி மருத்துவமனையின் சிறுநீரக சிகிச்சை மையக் குழுவினருக்கு விருது வழங்கியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவுக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்து, விருதை வழங்கினார். எம்.பி தயாநிதிமாறன், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்னூர் காவேரி மருத்துவமனையின் இயக்குநர் அன்புச்செழியன் பேசும்போது, ‘‘கடந்த 10 ஆண்டுகளில் ஏறக்குறைய 540 சிறுநீரக மாற்று சிகிச்சைகளை நாங்கள் வெற்றிகரமாக செய்துள்ளோம். மிகநவீன உட்கட்டமைப்பு வசதி, உயர்திறன் கொண்ட அறுவை சிகிச்சை, மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் குழு ஆகியவற்றை எங்களது மருத்துவமனை கொண்டுள்ளது. தமிழகம் மட்டுமில்லாது பிற மாநிலங்களிலிருந்து வரும் மக்களுக்கும் சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சைகளை திறம்பட மேற்கொண்டு வருகிறோம்’’ என்றார்.
சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் எஸ்.செந்தில்குமார், எஸ்.சசிகுமார், சிறுநீரகவியல் மருத்துவர்கள் பாலாஜி, வேல் அரவிந்த் ஆகியோரை உள்ளடக்கிய சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சைக்குழு கடந்த ஆண்டில் 98 சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சைகளை (உயிரிழந்தவர்கள் மற்றும் உயிருடன் இருப்பவர்களிடமிருந்து தானமாக பெறப்பட்ட) மேற்கொண்டுள்ளது.
தென்னிந்தியாவிலேயே கரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் மிக அதிக எண்ணிக்கையில் சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சைகளை செய்த முதன்மையான மையங்களுள் காவேரி கிட்னி சென்டரும் ஒன்றாகும்.
எங்களது சேவையை இந்த விருது மூலம் அங்கீகரித்த டிரான்ஸ்டன் அமைப்புக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தென்னூர் காவேரி மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவர் டி.ராஜராஜன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT