Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM
இத்தாலியில் நடைபெற்ற இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க அனைத்து தகுதிகளுடன் மும்பை விமான நிலையம் சென்ற தமிழக வீராங்கனையை, விமானத் தில் ஏற அனுமதிக்காகதால், அவர் போட்டியில் பங்கேற்க முடியாத வேதனையுடன் ஊர் திரும்பியுள்ளார்.
தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் தமிழக ஹாக்கி வீரர் பாஸ்கரன். இவரது மகள் பூர்ணிஷா(16) பிளஸ் 2 படித்து வருகிறார். இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி விளையாட்டு வீராங்கனை யான பூர்ணிஷா மாநில, தேசிய அளவில் 6 தங்கம், ஒரு வெண் கலப் பதக்கங்களை பெற்றுள்ளார்.
இவர், இத்தாலி நாட்டில் செப்.8-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற்ற இன் லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி உலக சாம்பியன்ஷிப் போட்டி யில் விளை யாடும் 10 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். மகளிர் அணியில் தென்னிந்தியா விலிருந்து தஞ்சாவூரைச் சேர்ந்த பூர்ணிஷா மட்டுமே தேர்வாகி யிருந்தார்.
இந்நிலையில், செப்.8-ம் தேதி மகளிர் அணியில் இடம்பெற்ற 10 பேரில் பூர்ணிஷாவைத் தவிர 9 பேருக்கு விசா வந்ததை அடுத்து, அவர்கள் மும்பை விமான நிலையத்திலிருந்து இத்தாலிக்குச் சென்றனர்.
பின்னர், பூர்ணிஷா இணைய தளத்தில் விசாவை பதிவிறக்கம் செய்துகொண்டு, இத்தாலி செல்ல மும்மை விமான நிலையத்துக்குச் சென்றார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை உள்ளிட்ட அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டது. ஆனால், விமானம் புறப்படும் ஒரு மணிநேரத்துக்கு முன்பு இத்தாலி செல்லும் கத்தார் விமான நிறுவன அதிகாரிகள், ‘இத்தாலி நாட்டின் மருத்துவ சான்றிதழ் இல்லை’ எனக் கூறி, பூர்ணிஷாவை விமானத்தில் ஏற்ற மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியாத வேதனையுடன் பூர்ணிஷா தஞ்சாவூர் திரும்பினார்.
இதுகுறித்து பூர்ணிஷா கூறும்போது, “எனது தந்தை ஹாக்கி வீரர், எனது சகோதரி மோனிஷா ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய சாம்பியன். தாய் பள்ளி ஆசிரியையாக உள்ளார். நான் கடந்த 11 ஆண்டுகளாக இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறேன்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க செல்ல எனக்கு இத்தாலி நாட்டிலிருந்து விசா வர தாமதம் ஏற்பட்டது. விசா ஆன்லைனில் வந்ததும் அதை பதிவிறக்கம் செய்து, செப்.9-ம் தேதி மும்பை விமான நிலையத்துக்கு சென்றேன். எனது ஆவணங்களை பரிசோதித்து, இரவு 10 மணிக்கு செல்லும் விமானத்தில் செல்ல பயணிகள் காத்திருப்போர் கூடத்தில் அமர வைத்தனர். ஆனால், இரவு 9 மணிக்கு வந்த கத்தார் விமான நிறுவன அதிகாரிகள் என்னை அழைத்து “இத்தாலி நாட்டின் மருத்துவ சான்றிதழ் இருந்தால் தான் விமானத்தில் ஏற முடியும்” எனக் கூறினர். நான் உடனடியாக இத்தாலி குடியுரிமை அதிகாரிகள், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டேன். அவர்கள் செல்போன் மூலம் பேசி அங்குள்ள அதிகாரிகளிடம் விளையாட்டு வீரர்களுக்கு இந்த மருத்துவ சான்று தேவையில்லை, ஏற்கெனவே இதேபோல, வீரர்கள் சென்றுள்ளனர் எனக் கூறியும் அதை ஏற்க கத்தார் விமான நிறுவன அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால், நான், இந்திய அணிக்காக விளையாட முடியாமல் சொந்த ஊருக்கு திரும்பி விட்டேன். எனக்கு நிகழ்ந்தது போல, இனி எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் ஏற்படக்கூடாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT