Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

திருப்பூரில் நடைபெற்ற சிறப்பு முகாமில் - தடுப்பூசி செலுத்தாமலேயே செலுத்தப்பட்டதாக சான்று : சுகாதாரப் பணியாளர்கள் மீது பெண் புகார்

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி கல்லாங்காட்டை சேர்ந்த பெண்ணுக்கு தடுப்பூசி செலுத்தாமலேயே, செலுத்தப்பட்டதாக ‘கோவின்’ செயலியில் சான்று பதியப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது: திருப்பூர் வீரபாண்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட கருப்பகவுண்டம்பாளையம் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக நேற்று முன்தினம் சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அலைபேசியில் படம் பார்த்தபடியே, எனது அலைபேசி எண், எந்த வகை தடுப்பூசி செலுத்த விரும்புகிறேன் போன்ற விவரங்களை பெற்றனர். என் விவரங்களை பதிவு செய்த நிலையில், தடுப்பூசி தீர்ந்ததாக அறிவித்தனர். ‘கோவின்’ செயலியில் பார்த்தபோது, எனக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக காண்பித்தது’’ என்றார்.

திருப்பூர் மாநகர் நலஅலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது ‘‘மெகா தடுப்பூசி முகாமில், மாநகர் பகுதியில் 28,200 கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 41,391 தடுப்பூசி செலுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, தடுப்பூசி வந்ததும் செலுத்தப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x